சரவாக் தேர்தல்களைக் கண்காணித்து வரும் பெர்சே, சிபுவில் இதுவரை 11 தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறது. பராமரிப்பு முதலமைச்சர் அடினான் சாதேம் உள்பட இரு தரப்புகளையும் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் அவற்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
பெர்சேயும் சரவாக் பெர்சேயும் கூச்சிங், சிபு, மீரி ஆகியவற்றில் 100 பார்வையாளர்களை நிறுத்தி வைத்துள்ளன.
தேர்தல் முறைகேடுகள் குறித்து அக்குழுவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர்.
அவர்கள் தங்கள் புகாரில், தேர்தல் கையூட்டு, தேர்தலுக்காக அரசு சொத்துகளைப் பயன்படுத்தல், வாக்களிப்பு மையங்களுக்கு 50மீட்டர் தொலைவுவரை வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டுதல் என 11 தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதைப் பட்டியலிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் கூச்சிங்கில் இருப்பதால் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்ய வேண்டியதாயிற்று என அக்குழுவின் தலைவர் வொங் மெங் சூ தெரிவித்தார். மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடமும் போலீசிலும்கூட புகார் செய்யப்போவதாக அவர் சொன்னார்.