சரவாக் தேர்தல்: வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கவலையுற்றிருக்கும் சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான், சரவாக்கியர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“எங்கள் பார்வையாளர்கள் நண்பகல்வரை 35விழுக்காட்டினர்தான் வாக்களித்திருப்பதாகக் கூறுகிறார்கள். எனவே, வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டிருப்போர் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தத் திரண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
“இசி அதிகாரிகளும் அவர்களின் கடமையைப் பாரபட்சமின்றி செய்ய வேண்டும், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்”, என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பத்து கிதாங் தொகுதியில் தலைகீழான நிலையில் ஒரு ஹெலிகாப்டரின் படத்தைக் கொண்ட பதாதை காணப்பட்டது. ஹெலிகாப்டரின் அடியில் “பிஎன்” என்று எழுதப்பட்டிருந்தது “இது உங்களுக்குத் தேவைதான்” என்று சீனமொழியில் எழுதப்பட்டிருந்தது.
டிஏபியின் விளம்பரப் பலகையின்கீழ் அப்பதாதை தொங்க விடப்பட்டிருப்பதால் அது டிஏபி-இன் வேலை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
அது பற்றி சரவாக் டிஏபி தலைவர் சோங் சியான் ஜென்னிடம் வினவியதற்கு அது ஒரு “அருவறுப்பான செயல்” என்று குறிப்பிட்டார்.
“இது மட்டமான அரசியல்” என்று வருணித்த அவர் ஒரு துயரச் சம்பவத்தைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொள்வதா என வெகுண்டார்.