மகாதிர்: நஜிப் சரவாக் வெற்றி குறித்துக் களிப்படைய காரணமேதுமில்லை

mahathirகடந்த  சனிக்கிழமை  சரவாக்  மாநிலத்  தேர்தலில்  பிஎன்  வெற்றி  அடைந்ததற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  களிப்படைய  எந்தக்  காரணமுமில்லை  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்  கூறினார்.

“நஜிப்  மகிழ்ச்சி  கொள்ள  காரணம் ஏதுமில்லை. சரவாக்  பிஎன்னின்  சாதனை பற்றிச்  சொல்வதென்றால்  நஜிப்  தலைமையிலான  மத்திய  அரசைப்  பலவீனப்படுத்தியதுதான்  அதன்  சாதனை.

“இனி,  அவர்  முன்  எப்போதையும்விட  சரவாக்கின்  ஆதரவை  நம்பி  இருக்க  வேண்டியிருக்கும். இப்போதே  சரவாக்  கேட்டதையெல்லாம்  கொடுத்திருக்கிறார்”, என  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

அடினான்  அரசாங்கம்  வலுவுடன்  இருக்கிறது  என்றால்  கூட்டரசு  அரசாங்கம்  வலுக்குறைந்துள்ளது  என்பதுதான்  அர்த்தமாகும்.

13வது  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  சாபாவும்  சரவாக்கும்  மத்திய  அரசாங்கத்துக்கு  மிகவும்  முக்கியமான  மாநிலங்கள்  ஆகிவிட்டன. அங்கிருந்து  12,  13  எம்பிகள்  கட்சி மாறினால்  அரசாங்கம்  கவிழ்ந்து விடும்.

“சரவாக்  என்ன  கேட்டாலும்  கிடைக்கும்.   சரவாக்  சரவாக்கியர்களே  என்ற  முழக்கம்  உரக்க  ஒலிக்கிறது”,  என்று  மகாதிர்  கூறினார்.

மத்திய  அரசு  சரவாக்கை  மிகவும் நம்பியிருப்பதை  மற்ற  மாநிலங்களும்  கவனித்துக்  கொண்டுதான்  இருக்கின்றன.  அவையும்  கூடுதல்  அதிகாரத்துக்குக்  கோரிக்கை  விடத்  தொடங்கி  விட்டன  என்றாரவர்.