பாஸ் இளைஞர் பிரிவு: திருநங்கைகள் வாழ்க்கை முறை மனித உரிமைகளுக்கு எதிரானது

தடை செய்யப்பட்டுள்ள செக்சுவாலட்டி மெர்தேகா விழா ஆதரவாளர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூக்குரலிடும் வேளையில் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக பாஸ் இளைஞர் பிரிவு 1948ம் ஆண்டுக்கான அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக் காட்டுகிறது.

அந்தப் பிரகடனத்தின் 16வது பிரிவில் அதனைக் காணலாம் என அந்த இளைஞர் பிரிவின் சட்ட, மனித உரிமை இயக்குநர் அகமட் ஸாம்ரி அஸாட் குஸாய்மி ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்டுள்ள அந்த விழாவுக்கு எதிராகக் கடுமையான நிலையை எடுத்துள்ள பல முஸ்லிம் அமைப்புக்களுடன் பாஸ் இளைஞர் பிரிவும் இணைந்து கொண்டுள்ளது.

திருநங்கைகளுடைய உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான போராட்டம் 1948ம் ஆண்டுக்கான அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்துக்கு முரணானது என அந்த பிரிவு வாதிடுகிறது.

“இதில் விநோதம் என்னவெனில்  செக்சுவாலட்டி மெர்தேகா விழாவின் தீவிர ஆதரவு நல்கியுள்ள அரசு சாரா அமைப்புக்களும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக் காட்டுவதாகும்…”

“ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் தொடர்பான தனிநபர் உரிமையை மட்டுமே அந்தப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் பற்றி அது குறிப்பிடவே இல்லை,” என அகமட் ஸாம்ரி சொன்னார்.

“முழு வயதடைந்த ஆண்களும் பெண்களும் இன, தேசிய அல்லது சமயக் கட்டுப்பாடின்றி திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை உருவாக்குவதற்கு உரிமை உண்டு,” என 16வது பிரிவு கூறுகிறது.

“குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான, அடிப்படையான  கூட்டு, அதனை சமூகமும் நாடும் பாதுகாக்க வேண்டும்” என்றும் அது சொல்கிறது.

1948ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் பாலியல் நாட்டம் குறித்து ஒன்றும் கூறவில்லை.

“ஆகவே எந்த அடிப்படையில் செக்சுவாலட்டி மெர்தேகாவை வலியுறுத்தும் அரசு சாரா அமைப்புக்கள் தங்களது தவறான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கின்றன? உண்மையான மனித உரிமைக் கோட்பாடுகளின்  அடிப்படையில் அந்தப் போராட்டம் நிகழவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப் போராட்டம் தொடங்கியது,” என்றார் அவர்.

2006ம் ஆண்டுக்கான ஜோக்ஜகார்த்தா கொள்கையையும் பாஸ் இளைஞர் பிரிவு நிராகரிப்பதாகவும் அகமட் ஸாம்ரி சொன்னார். பாலியல் நாட்டம், பாலியல் அடையாளம் ஆகியவை தொடர்பில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தை அமலாக்கும் முறைகளை அந்தக் கொள்கை விவரிக்கிறது.

29 அனைத்துலக மனித உரிமை நிபுணர்கள் உருவாக்கிய அந்தக் கொள்கை ” கல்வி-சார்ந்த தன்மையைக் கொண்டது. ஐநா உறுப்பு நாடுகளை அது கட்டுப்படுத்தாது” என்றும்  அவர் குறிப்பிட்டார்.

“உண்மையில் மலேசியா உட்பட 57 நாடுகள் ஜோக்ஜகார்த்தா கொள்கை மீதான தீர்மானத்தை எதிர்த்தன”, என அகமட் ஸாம்ரி கூறினார்.