சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம் நேற்று அறிவித்த புதிய மாநில அமைச்சரவையில் மூன்று துணை முதலமைச்சர்களை நியமித்திருக்கிறார். மூவரில் சீனர் எவருமில்லை என்பது ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இது, மே 7 தேர்தலில் சீனர் சமூகம் பிஎன்னுக்கு வாக்களித்தால் சீனர் ஒருவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அடினான் அளித்த வாக்குறுதியை மீறுவதாகாதா என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சரவாக் தேர்தலில் சீன வாக்காளர்கள் அளித்த பெருவாரியான ஆதரவால் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஐந்து தொகுதிகளை டிஏபி-இடமிருந்து பிஎன்-னால் கைப்பற்ற முடிந்தது. இது ஆளும் கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பெரிதும் உதவியது.
துணை முதலமைச்சர் பதவி குறித்து அடினான வாக்குறுதி அளித்த செய்தியை முதன்முதலில் வெளியிட்டிருந்தது போர்னியோ போஸ்ட். ‘அடினான்: சீன துணை முதலமைச்சர் தேவையா? எஸ்யுபிபி-க்கு வாக்களிப்பீர்’ என்று அந்த நாளேடுதான் செய்தி வெளீயிட்டிருந்தது.
பல ஊடகங்கள் அச்செய்தியை அப்படியே எடுத்துக் கூறியிருந்தன. சீன நாளேடுகளிலும் அது அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று அடினானிடம் வினவியதற்கு அவர் மறுத்தார். அப்படிச் சொல்லவில்லை என்றார்.
எனவே, உண்மையைக் கண்டறிய மலேசியாகினி , அடினான் எந்தச் செய்தியாளர் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை வழங்கினார் என்று கூறப்பட்டதோ அக்கூட்டத்தின் ஒலிப்பதிவைத் தேடிப் பிடித்தது.
அந்த ஒலிப்பதிவிலிருந்து அடினான் கூறியதாக போர்னியோ போஸ்டில் வெளிவந்த செய்தி தவறானது என்பது தெரிய வருகிறது.
“சீனர்கள் அரசாங்கத்தில் இடம்பெற விரும்பினால் எஸ்யுபிபி-க்கு வாக்களித்தப்பதன் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும். அப்படிச் செய்தால் ஒரு சீனரை அல்லது சிலரை அமைச்சரவைக்கு நியமனம் செய்வது குறித்து ஆலோசிப்பேன்.
“ஆனால், யாரும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் என்னால் யாரையும் நியமிக்க முடியாது. அதனால், நீங்கள் முதலில் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”, என்று அடினான் கூறினார்.
ஆக, “அரசாங்கத்தில் சீனப் பிரதிநிதித்துவம்” பற்றித்தான் அடினான் குறிப்பிட்டாரே தவிர “சீன துணை முதலமைச்சர்” பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
அதே வேளை போர்னியோ போஸ்டி,ல் தவறாக வெளிவந்த செய்தியைத் திருத்த அடினான் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
இப்போது வேண்டுமானால் அடினான் அப்படி வாக்குறுதி அளிக்கவில்லை என்று மறுக்கலாம். ஆனால், தப்பான செய்தியைத் திருத்தாமல் விட்டது தங்களில் ஒருவர் துணை முதலமைச்சராகப் போகிறார் என்ற எண்ணம் சீனர்களை பிஎன்னுக்கு ஆதரவாக வாக்களிக்க ஊக்குவித்திருக்கும் சாத்தியமும் உள்ளது.
நான் அப்பவே மைல்ட்டா டவுட்டு ஆனேன் !! இந்த முதலையாவது, சீனனை துணை முதலமைச்சராக நியமிப்பதாவது !! பாவம் சீனர்கள், அரசியல் சதுரங்கத்தில் அதிரடியாக காய்களை நகர்த்தி, எதிர்பாராத திருப்பங்களை அளிப்பதில் வல்லவர்களான இவர்களுக்கே செக்மேட் வைத்ததுபோல் தெரிகிறதே ?, சீனர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் ? பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல்வாதிப் பேச்சும் ஓடும் நீரும் ஒன்று என்று தெரியாதா?
வாக்குறுதிகளுக்கு பஞ்சமா என்ன? தேர்தலின் பொது எல்லாமே நடக்கும் –முடிந்த பின் தான் யார் உண்மை சொல்கிறான் என்று தெரியும். இது என்ன புதிது இல்லையே–இதுதான் அந்த நாளில் இருந்தே நடக்கிறதே.