ஹராபான் இடைத் தேர்தல்களைவிட்டு ஒதுங்கியிருத்தல் நன்று-ஆய்வாளர்கள்

givwபக்கத்தான்  ஹராபான்,  குறிப்பாக  பார்டி  அமானா  நெகாரா  எதிர்வரும்  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்களில்  போட்டியிடாமல் இருப்பது  நல்லது  என்று  கூறப்பட்டுள்ளது.

பல்முனை  போட்டியின்  விளைவுகள்  இடைத்  தேர்தல்  தோல்வியை  விட  மோசமாக  இருக்கும்  என  அரசியல்  ஆய்வாளர்கள்  எச்சரிக்கிறார்கள். சரவாக்  தேர்தலே  இதற்குச்  சாட்சி.

பிஎன்னுக்கு  மாற்றாக  தங்களை  நிலைநிறுத்த  முயலும்  எதிரணியினர்  தங்களுக்குள்  போட்டியிட்டுக்  கொள்வதைப்  பார்த்தால்    வாக்காளர்களுக்கு  எதிரணிமீதுள்ள  நம்பிக்கை  என்ன  ஆவது. குறைந்து  போகாதா  என்றவர்கள்  வினவுகிறார்கள்.

இந்த  விவகாரம்தான்  சரவாக்  தேர்தலில்  எதிரணியினரின்  தோல்விக்கு  வழிகோலியதாகக்  கூறப்படுகிறது. அங்கு  பல  தொகுதிகளில்  ஹராபான்  கட்சிகளான  பிகேஆரும்  டிஏபி  ஒன்றை  மற்றொன்று  எதிர்த்துப்  போட்டியிட்டன.

அப்படிப்பட்ட  பேரிடர்  மீண்டும்  நிகழாதிருக்க  இரண்டு  தொகுதிகளிலும்  பாஸ்  கட்சியே  போட்டியிடட்டும்  என  மற்ற  எதிரணியினர்  ஒதுங்கி  இருப்பது  நல்லது  என  மெர்டேகா  ஆய்வு  மைய  திட்ட  இயக்குனர்  இப்ராகிம்  சுபியான்  கூறினார்.

“இரண்டு   இடங்களிலும்  பாஸ்  போட்டியிட  விரும்பினால்  எதிரணியினர்  அப்படியே  விட்டு  விட  வேண்டும். இஸ்லாமிய  கட்சி  தனியே  போட்டியிட்டு  அதன்  பலத்தைக்  காண்பிக்கட்டுமே.

“இங்கு  அமானாதான்  பிரச்னையாக  இருக்கும். அது தன்னை  பாஸ்  கட்சியின்  வாரிசாகவும்  ஹராபானில்  பாஸ்  வகித்த  இடத்தைத்  தான்  வகிப்பதாகவும்  கருதுகிறது. அமானாவிடம்  ஆர்வம்  அதிகம்.  ஆனால்  பாஸின்  அளவுக்கு  அரசியலில்  அதற்கு  மதிப்போ  மக்களின்  ஆதரவோ  கிடையாது”, என்று  அவர்  சுட்டிக்காட்டினார்.

இப்ராகிமின்  கருத்தை  அரசியல்  ஆய்வாளர்  தாங்  ஆ  சாயும்  ஒப்புக்கொண்டார். எதிரணியினர்  இந்த  இடைத்  தேர்தல்களில்  நேரடிப்  போட்டிக்கு  விட்டுவிடுவதில்  கருத்திணக்கம்  காணத்  தவறினால்  இந்நிலை  அடுத்த  பொதுத்  தேர்தலிலும்  நிலவக்  கூடும்.

“வெற்றி- தோல்வியை  விடவும்  முக்கியமானது  இந்த  இடைத்  தேர்தல்; இங்கு எதிரணி (ஹராபான் மற்றும்  பாஸ்)  இணக்கம்  காணத்  தவறினால்  அவர்கள்மீது  மக்களுக்கு  சந்தேகம்  வந்து  விடும்.

“தொகுதி  ஒதுக்கீட்டில்  ஒரு  புரிதலுக்கு  வர  முடியாத  நீங்கள்  நாட்டை  எப்படி  ஆளப்  போகிறீர்கள்? இக் கேள்வியை  மக்கள்  கேட்பார்கள்”, என்றவர்  கூறினார்.

பேசுவது  முக்கியம்  என்று  தெரிந்தும்கூட    எதிரணியினரிடையே  பேச்சுகளில்  ஈடுபட  எந்த  முயற்சியும்  செய்யப்படவில்லை  என்பதையும்  தாங்  சுட்டிக்காட்டினார்.

அது  நடக்கும்  என்றும்  தோன்றவில்லை  என்றாரவர்.

எதிரணியினர்  கருத்திணக்கம்  காணும்  சாத்தியம்  அறவே  இல்லை  என்றுதான்  இன்னொரு  ஆய்வாளர், லியு  வூய்  செர்னும்  நினைக்கிறார்.

“சரவாக்  தேர்தல்  பாடம்  புகட்டியதாகக்  கூறப்படுகிறது. ஆனால் அங்கு  அடிபட்டவை  டிஏபி-யும்  பிகேஆரும்தான். பாஸும்  அமானாவும்  பாதிக்கப்படவில்லை.

“அத்தேர்தலில்  பாஸ்,  அமானா  இரண்டுமே  போட்டியிட்டன. ஆனாலும் வெற்றிபெறப்  போவதில்லை  என்பதை  அவை  உணர்ந்தே  இருந்தன.”, என்றாரவர்.

அப்படியே  இடைத் தேர்தல்  பற்றிப்   பேச்சுகள்  நடந்தாலும் அது  இடையிலேயே  முறிந்துபோகும்  சாத்தியம்  நிறையவே  உள்ளது.  ஏனென்றால்,   பாஸ், அமானா  இரண்டுமே  கோலா  கங்சார்,  சுங்கை  புசார்  ஆகிய  இரண்டு  தொகுதிகளிலும்  போட்டியிடுவதில்  பிடிவாதமாக  உள்ளன  என்றாரவர்.