இடைத் தேர்தல்களில் பாரிசானை தோற்கடிக்க நேரடிப் போட்டி, வலியுறுத்துகிறார் மகாதீர்

Mstandasone

சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க எதிரணியினர் ஒன்றுபட்டு, ஒன்றாக நிற்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் வலியுறுத்துகிறார்.

“இந்த புவாசா மாதம் இரு இடைத் தேர்தல்களைச் சந்திக்கவிருக்கிறது. இம்முறை நாம் அனைவரும் பிஎன்னை தோற்கடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

“இந்தப் போரை யார் முன்நின்று நடத்துவது என்பது முக்கியமல்ல. பிஎன்னுடன் போரிடுவதற்கு நமக்கு ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்க வேண்டும், ஏனென்றால் சரவாக்கில் நடந்தது போல இரண்டு அல்லது மூன்று (எதிர்க்கட்சி) வேட்பாளர்கள் இருந்தால், வாக்குகள் பிளவுப்படும், பாரிசான் வெற்றி பெறும்.

“நமக்கு நேரடிப் போட்டி மட்டும் இருந்தால், நமது அனைத்து கூட்டான வாக்குகளை பிஎன்னுக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு அளிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக பிஎன்னை தோற்கடிக்க முடியும்”, என்று நேற்றிரவு மலாவதி அரங்கத்தில் நடைபெற்ற மலேசியாவை பாதுகாப்போம் நிகழ்ச்சியில் பேசிய மகாதீர் கூறினார்.

ஹரப்பானும் பாஸ்சும் ஒன்றுபட வேண்டும்

இரு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட பாஸ் கட்சி காட்டும் தீவிரம் பற்றி குறிப்பிட்ட மகாதீர், எதிரணி ஒன்றுபட வேண்டும். இருக்கையைப் பிடிக்கும் வேட்கையில் பிஎன் வெற்றி பெற விட்டு விடக்கூடாது என்றார்.

பாஸ் கட்சி ஹரப்பானில் அங்கம் பெற்றிருக்கவில்லை என்றாலும் அது ஆளும் கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைவதைத் தடுக்கக்கூடாது என்றாரவர்.

“வேட்பாளர் யார் என்பது பற்றி நமக்கு கவலை இல்லை, அவர் பாஸ் கட்சியினராக இருந்தாலும், பாஸ் நம்முடன் இல்லை, நமது முக்கிய நோக்கம் பிஎன்னை தோற்கடித்து மக்கள் இனிமேலும் நஜிப்பை ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு காட்டுவதாகும்.

“இதற்குத்தான் நாம் கடுமையாக உழைத்து பிஎன்னை இந்த இடைத் தேர்தல்களில் தோற்கடிக்க வேண்டும்”, என்று மகாதீர் கூறினார்.

மகாதீரின் மன மாற்றம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி முன்னாள் பிரதமர் மகாதீரின் மன மாற்றத்தை வரவேற்றார்.

“இது மகாதீர் வெளிப்படுத்தியுள்ள புதிய வழிகாட்டல். இது சரவாக்கில் நாம் புரிந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.

“ஆகவே, அனைத்து கட்சிகளும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பேச்சுவார்த்தைக்கு திரும்பியாக வேண்டும்”, என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் கூறினார்.

இவ்விரு தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அஸ்மின் அலி, மகாதீர் இன்றிரவு கூறிய நேரடிப் போட்டி கொள்கையை நிலைநிறுத்துவது முக்கியம் என்றார்.