ஹிசாம் ரயிஸுக்கு சிறைத் தண்டனை இல்லை, அபராதம் மட்டுமே

 

Hishamfinedசமூக ஆர்வலர் ஹிசாம் ரயிஸ் மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஒன்பது மாத சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு தமக்கு வித்திக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஹிசாம் செய்துள்ள மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது..

“இது ஏகமனதாக முடிவு; தண்டனை மீதான மேல்முறையீட்டை நிராகரிப்பதற்கான காரணம் எதையும் நாங்கள் காணவில்லை.

“செசன்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை மாற்றுவதற்கான வலுவான காரணம் எதனையும் நாங்கள் காணவில்லை”, என்று தெங்கு மைமுன் அவரது தீர்ப்பில் கூறினார்.

செசன்ஸ் நீதிமன்றம் ஹிசாம் ரயிஸுக்கு ரிம5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது. அது சரியான தீர்ப்பு என்று நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்தில் கூடியிருந்த ஹிசாம் ரயிஸின் ஆதரவாளர்கள் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

செசன்ஸ் நீதிமன்றம் ஹிசாமுக்கு விதித்திருந்த ரிம5,000 அபராதம் போதுமானதல்ல என்றும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு உயர்நீதிமன்றத்திற்கு செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு உயர்நீதிமன்றம் ஹிசாமுக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஹிசாம் ரயிஸின் வழக்குரைஞர்களில் ஒருவரான அம்பிகா இத்தீர்ப்பு குறித்து “சற்று ஏமாற்றமடைந்த போதிலும் ஹிசாம் சிறைக்குப் போகவில்லை என்பதில் நாம் மிக மகிழ்ச்சி அடைகிறோம்”, என்றார்.