பாஸ் கட்சியை ஆதரிப்பதா?,அது முட்டாள்தனமாகும் என்கிறார் ஸைட் இப்ராகிம்

 

BNzaidbaffledகடந்த வாரம் வரையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தவறிழைக்க மாட்டார் என்று நம்பியிருந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.

எதிர்வரும் கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனலை தோற்கடித்து பிரதமர் நஜிப்புக்கு பாடம் புகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிஎன் வேட்பாளருக்கு எதிராக நேரடி போட்டி இருக்க வேண்டும் என்றும், எதிரணி வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, அது பாஸ் கட்சி வேட்பாளராகவும் இருக்கலாம் என்று மகாதீர் கூறியிருப்பதால் ஸைட் இப்ராகிம் கவலைப்படத் தொடங்கியுள்ளார்.

மகாதீரை “எதிரணித் தலைவர்” என்று வர்ணித்திருந்த ஸைட் இப்ராகிமுக்கு, இப்போது இதர ‘எதிரணித் தலைவர்கள்” என்று வர்ணிக்கப்பட்ட அம்பிகா சீனிவாசன் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆகியோரும் மகாதீரின் கருத்தை ஆதரித்துள்ளது சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

“பாஸ் கட்சி முஸ்லிம்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது; சிறார் திருமணத்தை ஆதரிக்கிறது; பெண்களுக்கான இடம் அவர்களது இல்லமே என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அக்கட்சிதான் இந்நாட்டில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது.

உங்களுக்கு பிஎன்னுக்கு பதிலாக பாஸ் வேண்டுமா? உங்களுக்கு பயித்தியம் பிடித்திருக்கிறது”, என்று ஸைட் இப்ராகிம் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பொதுமக்களின் நலன்களுக்காப் போராட வேண்டும் என்பதை சில எதிரணித் தலைவர்கள் மறந்து விட்டு, மாறாக பிஎன் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வெறுப்பைக் காட்டுவதிலும், எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதும் குறித்து ஸைட் வருத்தப்படுகிறார்.

பிஎன்னை தோற்கடித்து பிரதமரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் பாஸ் கட்சியை ஆதரிப்பது முட்டாள்தனமாகும் என்று ஸைட் கருத்துரைத்தார்.

பாஸ் கட்சிக்கும் பிஎன்னுக்கும் இடையிலான நேரடிப் போட்டியில் பிஎன் சுலபமாக வெற்றி பெறும். அக்கட்சிகளுக்கிடையே நட்புறவு இருக்கிறது. அது (பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்) ஒப்புயர்வற்ற தலைவரை (நஜிப்பை) தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளாது என்று ஸைட் மேலும் கூறினார்.