ரபிசி: மகாதிரை அதிகம் நம்ப வேண்டாம் என்ற அன்வாரின் அறிவுறுத்தல் சரியான நேரத்தில்தான் வந்துள்ளது

letterசிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எட்டுப் பக்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் குடிமக்கள் பிரகடனத்தில் மதிமயங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்திருப்பது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட ஒர் அறிவுறுத்தல் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார்.

“அது முக்கியமாக, பிஎன்னைத் தோற்கடிக்கக் குறுக்குவழி எதுவும் இல்லை என்பதையும் சீரமைப்புத் திட்டத்தை விட்டு விலகிச் சென்று விடக்கூடாது என்பதையும் கட்சித் தலைவர்களுக்கு நினைவுறுத்துகிறது.

“இப்போது இச்செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கேற்ப அடிநிலை தலைவர்கள் முதல் தேசியநிலை தலைவர்கள்வரை இனி தங்கள் கவனத்தைச் சரிசெய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்”, என்று ரபிசி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அன்வாரின் கடிதம் முதன்முதலில் பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டபோது கட்சியின் உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் அன்வார் அப்படி எழுதவில்லை என்று மறுத்தார். அன்வார் குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார் என்று வாதாடினார்.

ஆனால், ரபிசி, கடிதத்தில் காணப்படுவது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.

அக்கடிதம், குடிமக்கள் பிரகடனத்தை மகாதிரின் ஆவணம் என்று வருணித்து அது குறைபாடுடையது என்றும் பிகேஆர் திட்டங்களுக்கு ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டது.

முன்னாள் பிரதமருடனும் முன்னாள் நிதி அமைச்சரான டயிம் சைனுடினும் சேர்ந்து பணியாற்றுவது அபாயகரமானது என்றும் அன்வார் கடிதத்தில் எச்சரித்திருந்தார்.