1எம்டிபிமீதான பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வின் அறிக்கையில் ஒரு பகுதி நீக்கப்பட்டது பற்றி பிஏசி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் சொல்வது சுத்த பொய் என்கிறார் பிஏசி உறுப்பினர் டோனி புவார்.
“பிஏசி தலைவர் பிஏசி உறுப்பினர்களிடம் அது பற்றித் தெரிவித்தார் என்றும் பிஏசி அறிக்கையில் உள்ள குறிப்பிட்ட தகவல் இரகசியமானது, பொதுமக்களின் பார்வைக்கு உரியது அல்ல என்று கூறும் பேங்க் நெகாராவின் கடிதத்தை அவர்களிடம் காண்பித்தார் என்றும் அஸலினா நாடாளுமன்றத்தில் கூறியது பொய்”, என புவா இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்விவகாரம் தொடர்பில் பாகான் எம்பி லிம் குவான் எங்குக்கு அமைச்சர் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில், பேங்க் நெகாராவிடமிருந்து பிஏசி தலைவருக்கு (ஹசான் அரிபின்) கடிதம் வந்ததாகவும் அதில் அறிக்கைக்கு அது அளித்த எல்லாத் தகவல்களுமே இரகசிமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை எல்லா பிஏசி உறுப்பினர்களுக்கும் பிஏசி தலைவர் கடிதம் வழி தெரியப்படுத்தினார் எனவும் அஸ்லினா கூறினார்.
ஆனால், புவா அஸ்லினாவின் பதில் “தவறானது, அது அப்பட்டமான பொய்” என்றார்.
பிஏசி ஏப்ரல் 4-இல் அதன் இறுதிக் கூட்டத்தில் 1எம்டிபி மீதான அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் அதை வெளியிடவும் ஒப்புக்கொண்டது. மூன்று நாள்களுக்குப் பின்னர் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
“ஏப்ரல் 4 கூட்டத்துக்குப் பின்னர் ஹசான் எந்த நேரத்திலும் பிஏசி உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளவில்லை.
“எனவேதான், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இரண்டு முக்கியமான வரிகள் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிஏசி உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்”, என்றாரவர்.
அவை இரண்டும் 1எம்டிபி-இலிருந்து யுஎஸ்$1.03 பில்லியன் அனுப்பப்பட்ட குட் ஸ்டார் லிமிடெட் நிறுவனம் தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானது என்றும் அதற்கும் 1எம்டிபி-இன் கூட்டு நிறுவனமான பெட்ரோசவூதி-க்கும் தொடர்பில்லை என்று கூறும் வரிகளாகும்.
அவ்வரிகள் 1எம்டிபி கையாடல் செய்திருப்பதையும் சரவாக் ரிப்போர்ட், தி எட்ஜ், வால் ஸ்திரிட் ஜர்னல் ஆகியவை சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பதையும் நிரூபிக்கும் வரிகளாகும் என்றும் புவா குறிப்பிட்டார்.
“பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அப்படி என்னதான் இரகசியம் அந்த ஏப்ரல் 6ஆம் தேதி கடிதத்தில் உள்ளது?”, என்றவர் வினவினார்.
எல்லாவற்றையும்விட சுவாரஸ்யமானது, பிஏசி தலைவருக்கு பேங்க் நெகரா துணை ஆளுனர் எழுதிய கடிதம் பற்றி பிஏசி உறுப்பினர்களே “ஏதும் அறியாதபோது” அதில் உள்ளதை அஸலினா அறிய வந்தது எப்படி என்றும் புவா கேட்டார்.