செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள்: எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

செக்சுவாலட்டி மெர்தேகா நிகழ்வுகளின் போது மனித உரிமைகள் மீது கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டு பிடித்துள்ளவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதோடு பாகுபாடும் காட்டுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட பல மலேசியர்களின் போக்கு குறித்து நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.

எங்கள் அடையாளத்துக்கும் சுய நிர்ணயத்துக்குமான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நாங்கள் மலேசியக் குடிமக்கள்.

எங்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காக தொடுக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களும்  தவறான நோக்கம் கொண்ட கருத்துக்களும் நியாயமற்றவை. சமூகம் ஒதுக்கியதால் நீண்ட காலமாக அவலத்துக்கு இலக்காகியிருக்கும் மலேசியர்கள் குழு ஒன்றை அவர்கள் மேலும் ஒரங்கட்டியுள்ளனர்.

ஐநா மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர் என்ற முறையில் அத்தகைய அச்சுறுத்தலையும் மிரட்டலையும் அங்கீகரித்து ஊக்குவித்ததற்காக மலேசிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

சட்டத்திற்கு முன்பு எல்லா மலேசியர்களும் சம நிலையானவர்கள் என நமது கூட்டரசு அரசியலமைப்பின் 8(1), 8(2),10வது பிரிவுகள் தெளிவாக உத்தரவாதம் அளிக்கிறது. பாலியல் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக அது எல்லா மலேசியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. பேச்சு சுதந்திரத்துக்கும் ஒன்று கூடுவதற்கு அது உத்தரவாதம் அளிக்கிறது.

அத்துடன் பாலியல் நாட்டம் அல்லது பாலியல் அடையாளம் கருதாமல் அனைத்து மக்களுக்கும் மனிதர்கள் என்னும் முறையில் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையமும் குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் தொடர மாட்டோம்

இவ்வாண்டுக்கான செக்சுவாலட்டி மெர்தேகா கொண்டாட்டங்கள் மீது முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது முன்னுதாரணம் இல்லாதது. ஏனெனில் நாங்கள் இது போன்ற நிகழ்வுகளை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

எங்கள் பங்கேற்பாளர்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செக்சுவாலட்டி மெர்தேகா பொது நிகழ்வுகளை நாங்கள் நடத்த மாட்டோம். அதே வேளையில் செக்சுவாலட்டி மெர்தேகாவின் நோக்கங்கள் குறித்து விளக்குவதற்காக தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரைச் சந்திப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.

எங்கள் விழாவைத் தொடக்கி வைப்பதை மட்டும் செய்யவிருந்த அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது செகுசுவாலட்டி மெர்தேகாவை தீவிரமாக எதிர்க்கின்றவர்கள் அவதூறு கூறியிருப்பது குறித்தும் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

——————————————————————————————————————————————-

செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்