1எம்டிபிமீது விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே அதன்மீதான விவாதத்தில் கலந்துகொள்ள கடந்த மாதம் ஒப்புக்கொண்ட அதன் தலைவர் அருள் கந்தா இப்போது விவாதத்தில் கலந்துகொள்ள மறுப்பது ஏன் என்று டிஏபி எம்பி டோனி புவா வினவுகிறார்.
“அப்போது விவாதத்துக்குச் சரி என்றாரே. இப்போது அவர் சொல்லும் காரணம் சரியில்லை”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று அருள், 1எம்டிபிக்கும் இண்டர்சேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவன (ஐபிஐசி)த்துக்குமிடையில் நிலவும் சட்டப் பிரச்னை குறித்து போலீஸ் விசாரணை நடப்பதால் விவாதத்தில் கலந்துகொள்ள இயலாது என்று கூறியிருந்தார்.
“நான் பொலீசுக்கு உதவுவதிலும் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
“அதனால் விவாதத்தில் கலந்துகொள்ள இயலாது”, என்றாரவர்.
ஆனால், கடந்த மாதம் அருள் இந்தக் காரணத்தை எடுத்துரைக்கவில்லை. ‘வாதமா, வாருங்கள் மோதிப் பார்ப்போம்’ என்றார்.
எனவே, அருள் வாதத்துக்கு வர மறுப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம் என புவா நினைக்கிறார்.
1எம்டிபி வெற்றிகரமாக சீரமைக்கப்பட்டது என்று சொல்லி வந்தது பொய்த்துவிட்டது காரணமாக இருக்கலாம் என்றாரவர்.
வாதம் இரத்துச் செய்யப்பட்டாலும் 1எம்டிபி ஊழலுக்குப் பின்னேயுள்ள உண்மையைக் கண்டறியும் எதிரணியின் முயற்சி தடைப்படாது என புவா குறிப்பிட்டார்.