1எம்டிபி விவகாரம் தொடர்பில் வால் ஸ்திரிட் ஜர்னலும் (WSJ) சரவாக் ரிப்போர்டும் எப்போது பொய்யான செய்திகளை வெளியிட்டன என்பதை அமைச்சர் சாலே சைட் கெருவாக் எடுத்துக்காட்ட முடியுமா?
WSJ-யும் சரவாக் ரிப்போர்டும் அவற்றுக்குச் செய்திகள் கிடைத்த விதத்தைத் தெரியப்படுத்தாதவரை அவை கூறுவதை நம்புவதற்கில்லை என்று அமைச்சர் கூறியிருப்பதைத் தொடர்ந்து டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் WSJ-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார், இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் சரவாக் ரிப்போர்ட் மலேசியர்கள் பார்க்க முடியாதபடி அநியாயமாக முடக்கிப் போடப்பட்டுள்ளது என்றும் கிட் சியாங் கூறினார்.
“சாலே, தம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி மலேசியர்கள் சரவாக் ரிப்போர்ட்டைப் பார்க்க முடியாதபடி தடுத்து வைத்து பத்து மாதங்களாகின்றன. ஆனாலும், அந்தச் செய்தித் தளம் நஜிப்பின் இரட்டை ஊழல்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தடுக்க முடியவில்லை.
“சரவாக் ரிப்போர்ட் நஜிப்பின் இரட்டை ஊழல்கள் தொடர்பில் கடந்த ஒராண்டுக்கு மேலாக வெளியிட்டு வந்த செய்திகளில் எவை பொய்யானவை, எவை உண்மையல்லாதவை என்பதை சாலே சுட்டிக்காட்ட முடியுமா?”, என்று லிம் வினவினார்.