குலா: அரசாங்கம் சுஹாகாமை ஓரங்கட்டுவது ஏன்?

 

kulaunilateralconversionஅரசாங்க பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் குறைப்பு செய்யப்பட்டிருப்பதால் சுஹாகாம் என்ற மனித உரிமைகள் ஆணையம் அதன் நடவடிக்கைகளை கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பால் லோ நாடாளுமன்றத்தில் டிஎபி உறுப்பினர் தெரசா கோ கேட்டிருந்த கேள்விக்கு அளித்த பதிலில் கூறுகிறார்.

2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சுஹாகாமுக்கான நிதி ஒதுக்கீடு ரிம11 மில்லியனிலிருந்து ரிம5.5 மில்லியனுக்கு குறைக்கப்பட்டதால் அந்த அமைப்பு அதன் நடவடிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மாதிரியான நாடாளுமன்ற பதிலையை வர்ணிப்பதற்கான ஒரே சொல் “தர்மசங்கடம்” என்கிறார் குலசேகரன்.

மனித உரிமைகளைத் தற்காப்பதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு நியாயமற்ற மற்றும் தேவையற்ற பட்ஜெடி நிதி குறைப்பால் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பது எப்படி நாட்டிற்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தாமல் இருக்க முடியும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கேட்கிறார்.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் சுஹாகாம் மீது அரசாங்கம் வைத்திருக்கும் மதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

சுஹாகாமுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் ரிம5 மில்லியனை குறைக்கும் அளவுக்கு அரசாங்கத்தின் நிதி நிலை மோசமாகி விட்டதா என்று குலா வினவினார்.

பல அரசாங்க இலாகாகளிலிருந்து அரசாங்கம் பெருமளவிலான நிதியை சேமிக்க முடியும். ஆனால், ஏதோ காரணங்களுக்காக அவற்றின் மீது அரசாங்கம் கைவைக்கவில்லை என்று கூறிய குலா, எடுத்துக்காட்டாக, தேசிய சேவைப் பயிற்சி செயற்திட்டம் மூடப்பட்டால், ஆண்டொன்றுக்கு ரிம400 மில்லியன் மிச்சப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

Suhakamஆகவே, ஏன் சுஹாகாம் இலக்காக்கப்பட்டது?

மேலும், ஏப்ரல் 25 இல், சுஹாகாம் வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுற்றது. புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ஏன் அரசாங்கம் தள்ளிவைத்துள்ளது என்றும் குலா வினவினார்.

புதிய ஆணையர்களை நியமிப்பதில் அரசாங்கம் காட்டும் காலதாமதம் அரசாங்கத்தின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் சுஹாகாம் மனித உரிமைகளைத் தற்காக்கும் கோட்டையாகும் என்றாரவர்.

சுஹாகாம் அதன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு ஏன் முழு ஆதரவும் அளிக்கவில்லை என்று அரசாங்கத்தை கேட்கும் உரிமை மலேசியர்களுக்கு உண்டு என்று குலசேகரன் வலியுறுத்தினார்.