நஜிப்: ஒற்றுமை இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன்

முஸ்லிம்கள் ஒற்றுமையை தற்காக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன் என அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமையாக இருப்பதின் மூலம் முஸ்லிம்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறையச் சாதிக்க முடியும் என்றார் அவர்.

“வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்ற வெவ்வேறு நிறத்தையும் பண்பாடுகளையும்  வெவ்வேறு மொழிகளையும் பேசுகின்ற, வெவ்வேறு இனங்களையும் சார்ந்த முஸ்லிம்கள் அவர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றானவர்கள்,” என நாளை அனுசரிக்கப்படும் அய்டில்அட்ஹாவை ஒட்டி தமது www.1Malaysia.com.my வலைப்பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் ஹாஜ் யாத்திரையின் போது தங்கள் சமயக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒரிடத்தில் கூடுவது முஸ்லிம்கள் ஐக்கியமடைய வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் அவர் சொன்னார்.

இஸ்லாத்தில் ஒற்றுமை, சம நிலைக் கோட்பாடு முக்கியமானது எனக் கூறிய பிரதமர், 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகமது நபியின் ‘khutbah wada’ உரையில் அது வலியுறுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியான சூழலில் தொடருவதற்கு அனுமதித்துள்ள, நாடு இப்போது அனுபவித்து வருகின்ற வளப்பத்துக்கும் ஒற்றுமைக்கும் சமூகம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மக்கள் விவேகமாக செலவு செய்வதோடு தேவைப்படும் மக்களுக்கு உதவவும் வேண்டும் என அவர் நினைவுபடுத்தினார்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அய்டில்அட்ஹா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட நஜிப் ஒரே மலேசியா உணர்வோடு அந்த புனிதமான நாள் கொண்டாடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரதமரும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் தற்போது திருமெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பெர்னாமா