மறைந்த சாந்திக்கு ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் வீர வணக்கம்!

shanthi2-300x283ஹிண்ட்ராஃப் மக்கள் பேரியக்கத்தினரின் பேரன்பிற்கும் மேன்மையான போற்றுதலுக்கும் உரிய திருமதி சாந்தி பாலகிருஷ்ணன் என்ற லூர்ட்மேரி வாசு பிள்ளை  மே 22 ஆம் தேதி 2016 அதிகாலை 6 மணி அளவில் தமது இன்னுயிர் நீத்தார்.

2007ஆம் ஆண்டு மக்களின் எழுச்சி மூலம் உயிர்ப்பெற்ற ஹிண்ட்ராஃப் அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் துணிவுடனும், துடிப்புடனும் ஈடுபட்டு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் புக்கிட் ஜாலில் தோட்டத்தின் திருமதி சாந்தி பாலகிருஷ்ணன் என்கிறது  ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் வெளியிட்ட இரங்கல் செய்தி. அந்தச்செய்தியின் விபரம்:

சிறிதும் தன்னலம் கருதாமல், எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் தூய்மையான எண்ணத்தோடு, மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும்  சமூக, பொருளாதார சவால்களுக்கான தீர்வை  மட்டுமே இலக்காகக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்து போராடிய சாந்தியின் அளப்பெரிய சமூகப்பணி என்றென்றும் போற்றுதலுக்குரிய  வரலாற்று பதிவுகளாகும்.

ஐந்து முறைகள் கைதானாவர்

மலேசிய இந்திய சமூகத்தின்  உரிமைகளுக்கு போராடியதற்காக குறைந்தது ஐந்து முறை போலிஸ் இவரை கைது செய்துள்ளது . ஆனால் எந்த கைது நடவடிக்கையும் இவரின் தூய்மையான போராட்டத்தின் ஈடுபாட்டை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை . மாறாக இவரது துணிச்சல்   வெகுண்டெழுந்து போராடும் உத்வேகத்தை மற்றவர்களுக்கு அளித்தது என்பதுதான் உண்மை.

இரவென்றும் பகலென்றும் பாராமல், வெயிலென்றும் மழையென்றும் ஒதுங்காமல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு Shanthi1நிகழ்ச்சிகளில் பலராலும் “கேப்டன்” பாலா என்று அறியப்பட்ட அவரின் கணவர் திரு பாலகிருஷ்ணன் அவர்களோடு  இணைந்து,    தீபகற்ப மலேசியாவில் இவர் மேற்கொண்ட பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர் பயணங்கள் இவரது போராட்டத்தின் தீவிரத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

புக்கிட் ஜாலில் தோட்டப் போராட்டம்

புக்கிட் ஜாலில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வரும்  அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்த இவர்,  தோட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட  பல போராட்டங்களுக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்து  தமது கடைசி மூச்சு வரை போராடி உயிர் துறந்துள்ளார்.

IMG-20160522-WA0007எங்கோ ஓய்யாரத்தில் அமர்ந்துகொண்டு அப்பாவி மலேசிய இந்தியர்களின் அவலத்திற்கு குரல் கொடுப்பதாய் பாவனை காட்டும் கபடதாரிகளைப் போல் இல்லாமல்,  கேடயங்களை எதிர்பாராமல்   உரிமைகளை நிலைநாட்ட களமிறங்கிய இந்த வீரத்  தாய்க்கு ஹிண்ட்ராஃப் மக்கள் பேரியக்கம் தமது  வீர வணக்கங்களை  செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் பாலகிருஷ்ணன், பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருமதி சாந்தியின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

அன்னாரின் நல்லுடல் திங்கள்கிழமை (23/5/2016), 46, லாடாங் புக்கிட் ஜாலில், பத்து 61/2, ஜாலான் பூச்சோங், கோலாலம்பூர்  என்னும் முகவரியில் இருந்து நண்பகல் 12.00 மணிக்கு   ,எடுத்துச் செல்லப்பட்டு  பத்து 14  பூச்சோங்  மின்சுடலையில் தகனம் செய்யப்படும்.