2013 ஆம் ஆண்டில், பிரதமர் நஜிப் ரிம2.6 பில்லியன் நன்கொடையைப் பெற்றுகொள்வதற்கு பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அஸிஸ் அனுமதி அளித்தார் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா) தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி வெளியிட்ட வியப்புகுரிய செய்தி மீது டிஎபி மூத்த தலைவர் ஐயம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் இவ்வளவு தெளிவாக இருக்கிறதென்றால், இதை ஏன் நஜிப் தாமாகவே முன்வந்து கூறவில்லை என்று கேலாங் பத்தா நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் கேட்டார்.
“தமது சொந்த வங்கிக்கணக்கில் ரிம2.6 பில்லியனை வைத்துகொள்வதற்கு அனுமதி அளிக்கும் பேங்க் நெகாரா ஆவணங்கள் அவரிடம் இருக்குமானால், வால் ஸ்திரிட் ஜெர்னல் அறிக்கை வெளியான கடந்த 11 மாதங்களில் நஜிப்பால் ஏன் அவற்றை வெளியிட இயலவில்லை?
“அந்த ரிம2.6 பில்லியன் நன்கொடை சவூதி மன்னரிடமிருந்து வந்தது என்றால், அதை நிரூபிக்க ஏன் அவர் ஆவணங்களைக் காட்டவில்லை?
“நஜிப் இப்போது அந்த ஆவணங்களைக் கொண்டு வர முடியுமா?”, என்று கிட் சியாங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.