பெருந்தலைவர் நஜிப்பை வானளவப் புகழப் போகிறேன், மகாதீர் சூளுரைக்கிறார்

 

MtokillBNதாம் வெளிநாட்டில் இருக்கையில் பிரதமர் நஜிப் ரசாக்கை புகழ்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சூளுரைத்துள்ளார்.

“நான் வெளிநாட்டில் இருக்கையில், நஜிப்பையும் அவரது ரிம2.6 மில்லியன் கணக்கு பற்றியும் வானளவாகப் புகழ்வதின் மூலம் முன்னுதாரணத்தை உண்டாக்குவேன்.

“நான் வெளிநாட்டில் ஆற்றும் எந்த உரையிலும், வெளிநாட்டு ஊடக நேர்காணலில் அளிக்கும் எந்தப் பதிலும் அவரின் ஜனநாயக கைதுகளையும் எவரும் தடுத்து வைக்கப்படுவதையும் சிறப்பான செய்தியாக்குவேன்.

“நஜிப் இஸ்லாத்திற்கு அளித்த பெரும் பங்களிப்பையும் அதற்காக அரேபியர்கள் அவருக்கு வழங்கிய யுஎஸ்$681 மில்லியன் பற்றியும் பேச நான் தவறவே  மாட்டேன்.

“மேலும், அம்னோ பேராளர்கள் 1எம்டிபி மற்றும் பெரும் தலைவரின் கணக்கிலுள்ள ரிம2.6 மில்லியன் பற்றிய பேசக் கூடாது என்ற பேச்சு சுதந்திரம் (பற்றியும் பேசுவேன்)”, என்று மகாதீர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பாஸ்போர்ட் ஒரு சலுகை என்றும், அரசாங்கத்தை குறைகூறுபவர்களை வெளிநாட்டிற்கு செல்லவிடாமல் அரசாங்கம் தடை செய்ய முடியும் என்று புத்ரா ஜெயா கூறியிருப்பது குறித்து மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இது பெர்சேயின் தலைவர் மரியா சின் அப்துல்லா தென் கொரியாவுக்கு செல்லவிடாமல் தடைசெய்யப்பட்டது பற்றிய எதிர்வினையாகும்.

தமது குத்தலைத் தொடர்ந்த மகாதீர், பாஸ்போர்ட் ஒரு சலுகை என்று மலேசியா அரசமைப்புச் சட்டம் கூறுவதுடன், தற்போதைய பிரதமரை ஒருவர் புகழ்ந்து பேசத் தவறிவிட்டால் அவரது பிரயாணப் பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என்றும் நிர்ணயித்துள்ளது என்றாரவர்.

“நான் வெளிநாட்டில் இருக்கையில், நான் நஜிப்பையும் அவரது ஜனநாயக அரசையும் தற்காப்பேன். நான் அவ்வாறு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

1எம்டிபிக்கும் பிரதமரின் சட்டைப்பைக்குள்ளிருக்கும் பணத்திற்கும் மகிழ்ச்சியான பாராட்டுகள்”, என்று அவர் மேலும் கூறுகிறார்.

வெளிநாட்டில் இருக்கையில், வெளிநாட்டு ஊடகங்களிடம் பிரதமருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு இந்நாடு ஒரு பெரும் சிறைக்கூடமாக மாற்றப்படும் என்றும் மகாதீர் கூறினார்.