சுங்கை புசார் இடைத் தேர்தலில் பார்டி அமானா நெகாரா போட்டியிடுவதையே சிலாங்கூர் டிஏபி ஆதரிக்கிறது. பாஸ் அங்கு போட்டியிட்டால் அதன் அடிநிலை உறுப்பினர்கள் பிஎன்னுக்கு வாக்களிக்கக் கூடும். .
எனவே, அங்கு பக்கத்தான் ஹராபான் பாஸுக்கும் பிஎன்னுக்கும் எதிராக அதன் வேட்பாளரை களமிறக்கத்தான் வேண்டும். அதனால் அங்கு மும்முனைப் போட்டி உருவானால்கூட பரவாயில்லை என்கிறார் சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா.
“கடந்த ஞாயிற்றுக்கிழமை சுங்கை புசாரிலும் செகிஞ்சான் நகரிலுமுள்ள டிஏபி கிளைகளுக்குச் சென்று கட்சி அடிநிலை உறுப்பினர்களிடம் கலந்துரையாடினேன்.
“அவர்கள் எதிரணியின் பிரதிநிதியாக பாஸ் போட்டியிடுவதை விரும்பவில்லை, அதை ஆதரிக்கவும் மாட்டார்கள்.
“அவர்களில் சிலர், பிஎன்னுக்கும் பாஸுக்குமிடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் பாஸ்மீது கொண்ட ஏமாற்றத்தால் பிஎன்னைத் தேர்ந்தெடுப்போம் என்றார்கள்.
“அவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குகளுக்கு பாஸ் துரோகமிழைத்து விட்டது என்றும் பக்கத்தான் ரக்யாட்டின் அழிவுக்கும் காரணமாகி விட்டது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.