ஹூடுட் மசோதா: அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, மசீச, மஇகா, எஸ்யுபிபி, கெராக்கான் சாடல்

 

notohududபாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்பட்ட உறுப்பினரின் ஹூடுட் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த மசோதா பாரிசான் நேசனல் உச்சமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை.

நேற்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், பாரிசான் கூட்டணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளான மசீச, மஇகா, எஸ்யுபிபி மற்றும் கெராக்கான் ஆகியவை ஹாடியின் தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவுக்கு அரசாங்க விவகாரங்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதத்திற்காக அனுமதிக்கப்பட்டது குறித்து தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் அமைச்சரவை மற்றும் பாரிசான் நேசனல் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய், மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், எஸ்யுபிபி துணைத் தலைவர் ரிச்சர்ட் ரியோட் மற்றும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

“3-6-5 பாதுகாப்புகள்”

இந்த மசோதாவின் நோக்கம் ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் “3-6-5 பாதுக்காப்பு” அம்சங்களை அகற்ற எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும் என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஷரியா நீதிமன்றங்களின் கீழ் தண்டணை விதிக்கப்படும் எந்த குற்றங்களுக்கும் இந்த “3-6-5 பாதுகாப்புகள்”படி சிறைத் தண்டணை 3 ஆண்டுகளுக்கு மேல் போகக்கூடாது, சாட்டை அடி ஆறு அடிகளுக்கு மேல் போகக்கூடாது, அல்லது அபராதம் ரிம5,000 க்கு மேல் போகக்கூடாது என்ற வரம்பைக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மசோதா கிளந்தானிலுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், மலேசியர்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மீது மட்டும் அதிகாரப்பூர்வமாக விதிக்கும் ஒரு கட்டுப்பாடற்ற முறையிலான தண்டணை பெடரல் அரசமைப்புச் சட்டம் விதி 8(1) ஐ மீறுகிறது என்பதோடு அது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

மலேசியாவின் பல்லின மக்கள் மற்றும் சமய கோட்பாடுகளுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலைக்கல்லாக இருப்பது பெடரல் அரசமைப்புச் சட்டம் விதி 8 (1) என்பதை அத்தலைவர்கள் அவர்களின் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.