பள்ளிக்கூடங்களில் அறிவியல் கணிதப் பாடங்களுக்கான போதானா மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புக்காக போராடிய பெற்றோர்கள், நேற்று அந்த விவகாரம் மீது அரசாங்க விடுத்துள்ள அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
நேற்றிரவு தொடக்கம் பெற்றோர்களிடமிருந்து தமக்கு வாழ்த்துச் செய்திகளும் ‘மகிழ்ச்சி’ தெரிவிக்கும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருப்பதாக பேஜ் எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழுத் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் கூறினார்.
“அந்த முடிவுக்காக நாங்கள் துணைப் பிரதமருக்கு நன்றி கூறுகிறோம். என்றாலும் நாங்கள் அதன் விவரங்களை அறிய விரும்புகிறோம்,” என அவர் சொன்னார்.
முதல் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என தம்முடன் தொடர்பு கொண்ட பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“முதலாம் வகுப்பு மாணவர்கள் மீது ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது என்பது புரியவில்லை என்றும் அந்த மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்பதே அதன் பொருள்,” என்றும் நூர் அஸிமா குறிப்பிட்டார்.
ஆங்கில மொழி கற்பிக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வகை செய்யும் கொள்கை, ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்களைப் போதிப்பதற்கு துணையாக இருக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
“பிபிஎஸ்எம்ஐ, முன்னேற்றச் சிந்தனையைக் கொண்டது, கால வரம்பு இல்லாதது, அது தொடருவதற்கு அனுமதிக்க வேண்டும். என்றாலும் நாங்கள் இப்போது அதிகமாக கேட்க விரும்பவில்லை.”
ஆங்கிலத்தில் அந்த இரு பாடங்களையும் கற்று வரும் மாணவர்கள் அந்த மொழியில் தொடர்ந்து கற்பதற்கு அனுமதிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் நேற்று அறிவித்தார்.