ஹூடுட் விவகாரத்தில் பங்காளிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைத்த பிரதமரை நீக்க பாரிசான் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

xavier-jayakumar-pkrமலேசியப் பிரதமர் நஜிப் மிக ஆபத்தானவர். அவர் பணம், பதவிக்காகச் சொந்தக் கட்சிக்காரர்கள், பங்காளிக் கட்சித் தலைவர்கள் என்ற பாகுபாடின்றி எவருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் இழைப்பவர் என்பதை ஹூடுட் விவகாரத்தின் வழி மீண்டும் நிரூபித்து விட்டார். அவரின் தலைமைத்துவம் நாட்டு மக்களுக்கு எப்படி நன்மைபயக்கும் என்பதை மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

 

பிரதமர் நஜிப், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான முகைதின் யாசினுக்குக் கூடத் தெரியாத வண்ணம் அயல் நாட்டு நன்கொடையையான 260 கோடி ரிங்கிட்டைப் பெற்று அவர் வங்கிகணக்கில் வரவு வைத்தது போன்று பல முறையற்ற செயல்களின் வழி நாட்டுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்கர் ஜெயக்குமார் சேவியர்.

 

இப்பொழுது, இந்நாட்டின் அரசியல் சாசனத்தில் காணப்படும் சில அம்சங்களுக்குப் புறம்பான ஹூடுட் சட்ட விவகாரத்தையே, குறிப்பாக இஸ்லாமியர் அல்லாதாரைப் பாதிக்கும் விவகாரம் குறித்து, முஸ்லிமல்லாத தமது அமைச்சர்கள் எவரிடமும் விவாதிக்காமல், அவர்களுக்கு  அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததன் வழி, இவரது தோழமை, பங்காளித்துவம் நம்பகத்தன்மையற்றது என்பதை நஜிப் மீண்டும் அனைவருக்கும் தெளிவுப்படுத்தி விட்டார்.

 

கடந்த வியாழக்கிழமை, பாஸ் கட்சித்தலைவர் அப்துல் ஹடி அவாங் ஹூடுட் குறித்த ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அதனை அவை விவகாரத்தில் முன்னிலைப்படுத்தும்  தீர்மானத்தைப் பிரதமர்துறை அமைச்சர்  அஸாலினா ஓத்மான் கொண்டு வந்தார்.

 

இது வரை அரசாங்க விவகாரங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும் இதுபோன்ற  நாடாளுமன்ற அணுகுமுறையை எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் ஹூடுட் குறித்த தனி நபர் மசோதா மீதும் அமைச்சர் அஸாலினா மேற்கொண்டதால், அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும், பாரிசான் பங்காளிக் கட்சிகளின் அமைச்சர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார் சேவியர்.

 

இது குறித்து கூட்டறிக்கை விட்டுள்ள பாரிசானின்  முக்கியப் பங்காளிகளான  மசீச, மஇகா, கெரக்கான் மற்றும் எஸ்யுபிபி போன்ற கட்சிகள் மக்களவையில் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவுக்கு  அரசாங்க  விவகாரங்களைக் காட்டிலும்  முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது மீது தங்கள்  அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

 

இது அமைச்சரவை அல்லது பாரிசான் நேசனல் உச்சமன்ற கூட்டத்தில்கூட விவாதிக்கப்படவில்லை என்ற தங்களின்  ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

ஒப்பாரி வைப்பதை நிறுத்துவீர்    

 

இந்தக் கபட நாடகத்தில் தலைவால் தெரியாமல் சிக்கிக்கொண்ட பாரிசான் பங்காளிக் கட்சித் தலைவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளைத்notohudud துறப்பதாக ஒப்பாரி வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலஸ் சட்டமன்ற  உறுப்பினரும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

மலேசிய அமைச்சரவையில் இவர்கள் தலையாட்டிப் பொம்மைகளே என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ள பிரதமர் நஜிப்பையும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புக்குக் காரணமான பிரதமர் துறை அமைச்சர்  அஸாலினா  ஓத்மானையும் பதவி விலக வற்புறுத்த வேண்டும். அதை விடுத்து தங்கள் பதவி ராஜினாமா அறிக்கைகளையும் நாடகங்களையும் நடத்தக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

 

பிரதமர் நஜிப் பாரிசான் பங்காளித்துவத்திற்குச் சற்றும் மதிப்பளிக்காதவர். அவர் நாட்டுக்கு அளிக்கப்பட்டதாக கூறிக்கொள்ளப்படும் அன்னிய நன்கொடை குறித்த ரகசியத்தைக்கூட அம்னோவின் துணைத்தலைவருக்கோ, இதர பாரிசான் பங்காளிகளுடனோ, அமைச்சர்களுடனோ பகிர்ந்துக் கொள்ளாதவர்.

 

நாட்டுக்குக் கிடைக்கும் அனுகூலங்களை மட்டும் எப்படிப் பங்காளிகளுடன் பகிர்ந்து கொள்வார்? எப்படிஅதற்கான வழிமுறைகளை வகுப்பார்?, என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். எஞ்சும் மிச்சத்தில் தனக்குக் கொஞ்சம் கிடைக்காதா என்ற பிச்சைக்கார எண்ணத்தில் அமைச்சர்கள் காலம் தள்ளக்கூடாது என்றாரவர்.

 

பிரதமரின் தான்தோன்றித்தனமான செயல்களால், நாட்டு மக்களுக்கு அவர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்புகளுக்கும், அவமதிப்புகளுக்கும் தாங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கடமையுணர்வு பாரிசான் பங்காளிக் கட்சிகளின் அமைச்சர்களிடம் இருந்திருந்தால் அவர்கள் முகைதின் யாசினுடன் சேர்ந்து பிரதமர் நஜிப்புக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருக்க வேண்டும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவது உலக இயல்பு. ஒரு கபட நாடகத்தில் தங்களைச் சிக்கவைத்த அமைச்சரும் பிரதமரும் அதற்கான தண்டனையைப் பெற வேண்டுமே தவிர, பிரதமரின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட பங்காளிக்கட்சிகளின் அமைச்சர்கள் அல்ல!

 

ஆக, பாரிசான் பங்காளிக் கட்சி அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிக்கை விடுவது  விவேகமோ, வீரமோ கொண்ட செயலாகாது. அது பரிதாபமான அவர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுவதாகவே இருக்கிறது என்று சேவியர் இடித்துரைத்தார்.

 

பிரதமர் இவர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு, இவர்களே தங்களைத் தானாகத் தண்டித்துக் கொள்வதைப் போன்று பாவனை செய்வது மிக மலிவான நகச்சுவையாகும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்