மாநில பிரச்னை குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்யாதீர்: திரெங்கானு எம்பி வேண்டுகோள்

arazifதிரெங்கானு  மந்திரி  புசார்   அஹ்மட் ரசிப்  அப்ட் ரஹ்மான்  பொறுப்பற்ற  தரப்பினர்  பெர்னாமாவிலும்  வாட்ஸ்எப்பிலும்  மாநில  அரசியல்  குறித்து  பொய்யான  செய்திகள்  பரப்புவதை  நிறுத்த  வேண்டும்  என்று  வலியுறுத்தினார்.

அது  பொதுமக்களிடம்  தப்பான  எண்ணத்தைத்  தோற்றுவித்து  திரெங்கானுவின்  நிலைத்தன்மையையும்  கெடுத்து  விடும்  என்றாரவர்.

“இவ்விவகாரம்மீது  போலீசும்  எம்சிஎம்சி (மலேசிய   தொடர்பு,  பல்லூடக  ஆணையம்)-யும்  விசாரணை  மேற்கொண்டிருப்பதாக  அறிகிறேன். இதற்குப்  பொறுப்பானவர்கள்  அடையாளம்  காணப்படுவார்கள்  என்றும்  நம்புகிறேன்.

“இதற்குக்  காரணமானவர்  நீதிமுன்  நிறுத்தப்பட  வேண்டும். அது  ஒரு  பாடமாக அமையும்.  அப்போதுதான்  அவதூறுகளால்   நாட்டின்  நிலைத்தன்மை  பாதிக்கப்படாதிருக்கும்”,  என்றவர்  சொன்னார்.

‘Sultan Mizan Kembalikan Darjah Kebesaran Kepada MB Terengganu'(சுல்தான்  மிசான்  திரெங்கானு  எம்பிக்கு  அரச  விருதுகளைத்  திரும்பக்  கொடுத்தார்) என்ற  பொய்யான  செய்தி  குறித்துக்  கருத்துரைத்தபோது  அஹ்மட்  ரசிப்  இவ்வாறு  கூறினார்.

நேற்று  முதல்  பரவிவரும்   அச்செய்தி  பெர்னாமாவை  மேற்கோள்  காட்டி,  பெர்னாமாவின்  திரெங்கானு செய்திப்  பிரிவுத்  தலைவர்  ஸலினா   மைசான்  இங்கா  அனுப்பியது  என்று  கூறப்பட்டிருந்தது.

ஆனால்,  ஸலினா  மைசான்  அதை  மறுத்தார்.   அது  பற்றி  போலீசிலும்  எம்சிஎம்சி-இலும்  புகார்  செய்யப்போவதாகக்  கூறினார்.