மகாதிர்: மக்கள் அன்வாரை அல்லது டிஏபி-யைத் தேர்ந்தெடுக்கலாம்; அது அவர்களின் விருப்பம்

no proமலேசிய  அரசியல்  வானில்  எத்தனையோ  எதிர்பாராத  நிகழ்வுகள்  நிகழ்ந்துள்ளன. அப்படி ஒன்று  அண்மையில்  நிகழ்ந்தது.  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  நேர்காணல்  ஒன்று  டிஏபி செய்தித்தாளான  ராக்கெட்கினி-இல் வெளிவந்திருந்தது.

வழக்கம்போல்  மகாதிர்  அதிலும் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறை  கூறியிருந்தார். பிரதமர்  ஊழல்  செய்திருப்பதாக  சொன்னார்.அவரைப்  பதவியிலிருந்து  நீக்க  வேண்டியது  அவசியம்  என்று  வலியுறுத்தினார்.

அன்வாரின்  பெயரைச்  சொல்லும்போது  மட்டும்  முன்னாள்  பிரதமர்  சங்கடப்பட்டதுபோல்  தோன்றுகிறது.

மக்கள்  யாரை  வேண்டுமானாலும்  தங்கள்  தலைவராக  தேர்ந்தெடுக்கலாம்,  அது  அவர்களின்  உரிமை  என்றார்.  அது  சிறையில்  உள்ள  முன்னாள்  எதிரணித்  தலைவராகக்கூட  இருக்கலாம். ஆனால்,  அதற்குமுன்  நடப்புப்  பிரதமரைப்  பதவியிலிருந்து  தூக்க  வேண்டும்  என்றவர்  வலியுறுத்தினார்.

“நஜிப் (பதவியில்) இருக்கும்வரை  ரிபோர்மாசி  பற்றி  அல்லது  வேறு  எதைப்  பற்றியும்  பேசலாம். ஆனால்,  எதுவும்  நடக்காது. நஜிப்பை  ஒழித்து  ஜனநாயகத்துக்குத்  திரும்ப  வேண்டும். அதன்பின்னர்  மக்கள் தங்கள்  விருப்பம்போல்  தேர்ந்தெடுக்கலாம்.

“அன்வார்  சிறையிலிருந்து  வந்தாலும்  கவலையில்லை. நாம்  ஜனநாயகத்துக்குத்  திரும்புவோம்.  மக்கள் தாங்கள்  விரும்பும்  அரசாங்கத்தைத்  தேர்ந்தெடுக்கலாம்.

“….மக்கள்  அன்வாருக்கு  வாக்களிக்க  விரும்பினால்,  அவரையே  தேர்ந்தெடுக்கலாம்.  அன்வாரை  விடுவிக்கும் ஒரு  அரசாங்கத்தைத்  தேர்ந்தெடுக்க  விரும்புகிறார்களா,  அது  அவர்களின்  விருப்பம்”, என  மகாதிர்  குறிப்பிட்டார்.

“மக்கள்தாம்  தலைவர்களைத்  தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தேர்வை  நாம்  ஏற்கத்தான்  வேண்டும். அவர்களின்  தேர்வு  தவறாக  இருந்தால்  பிரச்னைதான்.

“மக்கள்  டிஏபி-யைத்  தேர்ந்தெடுத்தால்கூட  என்னால் தடுக்க  முடியாது”,  என்றார்.