மகாதீர்: ஹூடுட் சட்டத்தின் கீழ் மலாய்க்காரர் கை வெட்டப்படும், சீனருக்கு குறைந்த கால சிறைத் தண்டனை!

 

Monjusticeபாஸ் கட்சி முன்மொழிந்துள்ள ஹூடுட் சட்டப்படி ஒரே மாதிரியான குற்றச்செயலுக்கு மலாய்க்காரர்கள் அவர்களுடையக் கைகளை இழப்பார்கள். ஆனால், சீனர்களுக்குக் குறைந்த கால சிறைத் தண்டனை கிடைக்கும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறினார்.

“ஒரு சீனரும் ஒரு மலாய்க்காரரும் ஒன்றாக ஏதாவது ஒன்றைத் திருடினால், மலாய்க்காரரின் கை வெட்டப்படும், ஆனால் சீனருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை மட்டுமே கிடைக்கும். இதைத்தான் அவர்கள் (பாஸ்) முன்மொழிகின்றனர்”, என்று மகாதீர் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

சட்டங்கள் நியாயமானவையாக இருந்தால் மட்டுமே அவை உண்மையிலேயே இஸ்லாமியச் சட்டங்கள் ஆகும் என்பதை வலியுறுத்த அவர் மேற்கண்ட எடுத்துக்காட்டை கூறினார்.

“இது (இருவிதமான தண்டனை) நீதியாகுமா? இது நீதி என்று நீங்கள் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

“இருவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை என்றால் மட்டுமே நீதியை நிலைநிறுத்த முடியும்.

“(முன்மொழியப்பட்டுள்ளதில்), தண்டனைகள் வெவ்வேறானவை. அவை நியாயமானதல்ல. ஆகவே, அவை இஸ்லாமியமானதல்ல”, என்று மகாதீர் வாதிட்டார்.

ஒரு நாடு இஸ்லாமிய நாடு என்று கூறிக்கொள்வதால், அது தீவிரமானதாக இருக்க வேண்டும் அல்லது நமது நாட்டின் பல்லின மற்றும் பல சமய சிறப்பியல்புகளை நிராகரிக்க வேண்டும் என்பதாகாது என்றாரவர்.

நமது நாட்டில் இரு சட்டங்கள், பொதுச்சட்டம் (Common law) மற்றும் ஷரியா சட்டம், பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலும் நீதி முன்னிடம் பெறுகிறது என்று மகாதீர் கூறினார்.