இரு இடைத் தேர்தல் டிஎபி நிகழ்ச்சிகளில் மகாதீர் பங்கேற்கிறார்

no pro

கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியலுக்கு ஒரு முடிவு கட்டும் கடும் சித்தத்துடன் ஜோகூர் கேளாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் பிரதமர் களமிறங்கினார்.

அத்தொகுதியின் தீர்ப்பு என்ன என்பது வரலாறு. இன்று நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடும் பாரிசான் வேட்பாளர்களை தோற்கடிக்க மகாதீர் அவரது பரம வைரியான லிம் கிட் சியாங்குடன் டிஎபியின் பிரச்சார மேடைகளில் தோன்றவிருக்கிறார்.

இவ்வார இறுதியில் சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் தொகுதிகளில் டிஎபியின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் 1எம்டிபி மற்றும் பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கும் பணம் குறித்து மகாதீர் மிக முக்கியமான உரையாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வெளியிட்டுள்ள ஓர் ஊடகச் செய்தில் கூறுகிறார்.

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் இவ்விரு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றவிருக்கிறார்.

சுங்கை புசார் நிகழ்ச்சியில் உரையாற்றவிருப்பவர்களில் சிந்தியா கேபிரியல், அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி, ஸுல்கிப்லி அஹமட், பி. குண்சேகரம், ஸைட் இப்ராகிம், கிளேர் ரியுகாஸல் பிரௌன் (ஸ்கைப் வழையாக) மற்றும் டோனி புவா ஆகியோர் அடங்குவர்.

அம்பிகா சீனிவாசன், ஹுசாம் மூசா. எ. காடிர் ஜாசின், மரியா சின் அப்துல்லா, இங்கா கோர் மிங் மற்றும் காலிட் சாமாட் ஆகியோர் கோலகங்சார் தொகுதிக்கான டிஎபி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இவ்விரு நிகழ்ச்சிகளும் மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.