என்எஸ்சி சட்டவரைவு: சீரமைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் வலியுறுத்திய அடுத்த நாளே சட்டமானது

nscbillதேசிய  பாதுகாப்பு  மன்றச்  சட்டவரைவு  2015,  சீரமைக்கப்பட  வேண்டும்  என்று   ஆட்சியாளர்  மன்றம்  கேட்டுக்கொண்ட  மறுநாளே,  அது  அரச  ஒப்புதலின்றி  அரசிதழில்  வெளியிடப்பட்டுச்  சட்டமாகியுள்ளது.

அரசு  இதழில்,  கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி  66,  சட்டவிதி 4(ஏ)-இன்படி  அச்சட்டவரைவு  2016, பிப்ரவரி  18-இல்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக்  குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டவிதி  4(ஏ),  ஒரு சட்டவரைவு  பேரரசருக்கு  அனுப்பப்பட்டு  30  நாள்கள்  ஆன  பின்னர்  பேரரசர்  ஒப்புதல்  அளிக்காது  போனாலும்  சட்டமாகி  விடும்  என்று  கூறுகிறது.

தேசிய  பாதுகாப்பு மன்றச்  சட்டம்,  மற்றவற்றோடு, பாதுகாப்புக்கு  மிரட்டல்  ஏற்பட்டிருப்பதாகக்  கருதப்படும்  இடங்களில்  நெருக்கடி  நிலை  பிரகடனம்  செய்யும்  அதிகாரத்தைப்  பிரதமரின்  தலைமையின்கீழ்  செயல்படும்  தேசிய  பாதுகாப்பு  மன்றத்துக்கு  வழங்குகிறது.

ஆட்சியாளர்  மன்றம்  தேசிய  பாதுகாப்பு  மன்றச்  சட்டவரைவு  சீரமைக்கப்பட  வேண்டும்  என்று  குறிப்பிட்டு  அதை  பிப்ரவரி  17-இல்  திருப்பி  அனுப்பியது.

அப்போது  சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி  சட்டவரைவின்  சில  பகுதிகள்  திருத்தி  அமைக்கப்படும்  என்று  சொன்னார்.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆட்சியாளர்களின்  பரிந்துரையைக்  கவனத்தில்  கொள்வதாகக்  குறிப்பிட்டார்.

இச்சட்டவரைவு  டிசம்பர்  22-இல்,  நாடாளுமன்றத்தில்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போதே  அரசாங்கம்  மலேசியாவில்  சர்வாதிகார  ஆட்சியைக்  கொண்டுவர  முயல்கிறது  எனக்  கடிந்துரைக்கப்பட்டது.  ஆனால்,  பயங்கரவாதத்தை  எதிர்க்க  அப்படிப்பட்ட  சட்டம்  தேவைதான்  என்று  நஜிப்  கூறினார்.