அஸ்ஹார் அப்துல் ஷுக்குர், சுங்கை புசார் தொகுதித் தலைவராகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எம்பி தேர்தலில் குதிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த அமனா வேட்பாளர் சுங்கை புசாரில் எதிர்த்து நிற்கப்போவது இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை. ஒருவர் மேரு சட்டமன்ற உறுப்பினர் அத்துடன் சிலாங்கூர் பாஸ் தலைவர் டாக்டர் ரானி ஒஸ்மான், மற்றொருவர் சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புடிமான் முகம்மட் ஸோடி.
ஆனால், 51-வயதாகும் அஸ்ஹார் 36 ஆண்டுகளாகவே தாம் இதற்குத் தயராராகி வந்திருப்பதாகக் கூறுகிறார்.
“15-வயதில் இடைநிலைப் பள்ளியில் இருந்தபோதே அரசியலுக்குத் தயாராகி விட்டேன். அப்போதே நான் எதிரணிதான்”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுவார். தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுடனும் வாதாடுவார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அஸ்ஹாரின் தந்தை பிஎன்னில் ஒரு முக்கிய பிரமுகர். தஞ்சோங் காராங் எம்பி-ஆகவும் சுங்கை பூரோங் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
ஆனால், அவரின் தந்தை அஸ்ஹாரின் அரசியல் கொள்கைகளில் என்றும் குறுக்கிட்டதில்லை.