ரபிசி: கிளந்தான் வெள்ளத்தின்போது நஜிப்கூட தனி ஜெட் விமானத்தைப் பயன்படுத்தவில்லையே

jetகுறுகிய  காலத்தில்  பல  வேலைகளைச்  செய்ய  வேண்டியிருந்தது  அதனால்தான்  பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  தனி  ஜெட்  விமானத்தில்  இஸ்தான்புல்லுக்குப்  பறந்து  சென்றார்  என்று  கூறப்படும்  காரணத்தை   பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிசி  ரம்லி  ஏற்கவில்லை.

2014-இல்  கிளந்தான்  வெள்ளத்தின்போது  நஜிப்  உடனடியாக  மலேசியாவுக்குத்  திரும்பி  வரவில்லை  என்பதை  மக்கள்  இன்னும்  மறக்கவில்லை என்றாரவர்.

“ஹவாயிலிருந்து  வேறு  ஒரு  விமானத்தில்தான்  அவர்  திரும்பினார். பிரதமர்  பயன்படுத்தப்படுவதற்கான  தனி  ஜெட்  விமானம்  அப்போது  வேறு  எங்கோ  சென்றிருந்தது.

“அது  லோஸ்  எஞ்சலிஸ்  சென்று  அங்கிருந்து  இந்தியானாபோலீஸ்  சென்றது. அது  பற்றி  ரோஸ்மா  இன்னும்  விளக்கவில்லை”, என  ரபிசி இன்று  கோலா கங்சாரில்  கூறினார்.

நேற்று  ரோஸ்மாவின்  உதவியாளர்  ரிசால்  மன்சூர், 3ஜி  சிறார்  நல  விருதை  வாங்குவதற்காக  ரோஸ்மா   இஸ்தான்புல்லுக்கு  13 மணி நேரம் பறந்து செல்ல வேண்டியிருந்தது.  அதன்பின்னர்  அவர்  பேரரசியாரால்  தொடக்கி  வைக்கப்படவிருந்த  மலேசிய  சாரணியர்  சங்கக்  கூட்டத்துக்கு  விரைவாக  திரும்பி  வர  வேண்டியிருந்தது  அதனால்தான்  அவருக்காக  தனி  ஜெட்  விமானம்  ஏற்பாடு செய்யப்பட்டது  என்று  கூறி  இருந்தார்.

ரிசால்  கூறும்  காரணம்  புதிதல்ல  என்று  ரபிசி  குறிப்பிட்டார்.

“இப்படித்தான்  ஏதாவது  காரணம்  கூறுவார்கள்.  பேரரசரின்  பெயரையும்  சேர்த்துக்கொள்வார்கள்”,  என்றார்.jethired

பின்னர்,  ரபிசி  ஒரு  விவிஐபி(மிக முக்கியமானவர்)  என்று  கருதப்படுவதற்கான  தகுதி  என்ன,   அவர்  தனி  ஜெட்  விமானத்தைப்  பயன்படுத்துவதற்கான  தகுதி  என்னவென்றும்  வினவினார்.

ரோஸ்மாவின்  மகள்  நூர்யானா  நஜ்வா  நஜிப்பும்  அந்த  ஜெட்  விமானத்தில்  தன்  தாயாருடன்  பயணித்திருக்கிறார்.

“ரோஸ்மா,  நூர்யானா  இருவருமே அந்த  விமானத்தில்  இருந்ததை  என்னால்  உறுதிப்படுத்த  முடியும். பிரதமரின்  மகளும்  ஒரு  விவிஐபி-தானா?”, என்று   வினவிய  ரபிசி  நூர்யானா  விமானத்தில்  ஏறுவதைக்  காட்டும்  நிழல்படங்களையும்  காண்பித்தார்.

இந்த ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்ததற்கான செலவு ரிம86.4 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.