அம்பிகா: ஆட்சியாளர்களின் கருத்து ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு ஏஜி விளக்க அளிக்க வேண்டும்

 

Ambiganscதேசியப் பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) மசோதா குறித்து ஆட்சியாளர்கள் தெரிவித்திருந்த கருத்து ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்டி அலி விளக்க வேண்டும் என்று அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இச்சட்டம் பேரரசரின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கப் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இக்கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் ஆட்சியாளர்களைச் சந்தித்த அபாண்டி இச்சட்டத்தில் காணப்படும் சில பகுதிகள் குறித்து நுண்ணாய்வு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த மசோதாவுக்கு திருத்தங்கள் ஏதும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சட்டத்தின் எந்த விதிகளாவது திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதா என்பதையும், எது எப்படியாயினும் ஏன் திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு அவருக்கு உண்டு என்று #தாக்நாக்டிக்டேட்டர் என்ற அரசு சார்பற்ற அமைப்பின் தலைவரான அம்பிகா மேலும் கூறினார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்சி) சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவ-போலீஸ் ஆட்சிக்காண ஒரு தாவுதல் ஆகும் என்றும் அதில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்றாரவர்.

இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதோடு மிகக் கடுமையான அதிகார அத்துமீறலாகும் என்று அம்பிகா மேலும் கூறினார்.