இந்திய வாக்காளர்களைப் பிடிக்க வலைவீசுகிறார் பாரிசான் தலைவர் நஜிப்

 

najiballocatesmoneyகோலகங்சார் நாடாளுமன்ற தொகுதியில் வாழும் இந்திய சமூகத்திற்கு பல சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை இன்று பிரதமரும் பாரிசான் தலைவருமான நஜிப் ரசாக் அறிவித்தார்.

அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் எஸ்ஜேகேடி  (SJKT) காந்தி மெம்மோரியலின் சுவற்றை மேம்படுத்துவதற்கு ரிம100,000 ஒதுக்கப்பட்டுள்ளதும் அடங்கும்.

அப்பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்குக்காக 8 மீட்டர் உயரமுள்ள சுவர் எழுப்புவதற்கு ரிம100,000 நிதி உதவி கேட்டார்களாம் என்று அப்பள்ளியின் விளையாட்டுத் திடலை இன்று திறந்து வைத்து பேசிய நஜிப் கூறினார்.

அப்பள்ளிக் கட்டடத்திற்கு பக்கத்திலுள்ள 0.6 ஹெக்டேக்கர் நிலம் விளையாட்டு திடலாகப் பயன்படுத்துவதற்காவும் வழங்கப்பட்டது.

நஜிப் நடத்திய இந்த வாரிவழங்கும் நிகழ்ச்சியில் பேராக் மாநில மந்திரி புசார் ஸாம்ரி அப்துல் காடிர், மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், கெராக்கான் தலைவர் மா சியு கியோங் மற்றும் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் ஆகியோரும் இருந்தனர்.

கோலகங்சார் இந்தியர் மன்றத்திற்கான ஒரு புதிய கட்டடத்திற்கு ரிம750,000 வழங்குவதாகவும் நஜிப் அறிவித்தார்.

இன்னும் உண்டு: ஜாலான் சுல்தான் இஸ்கந்தர் ஷாவிலுள்ள கிரிமடோரியம், அதன் வேலி ஆகியவற்றை பழுது பார்க்கவும் சாலையைப் புதுப்பிக்கவும் “நான் ரிம115,000 நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளேன்”, என்று நஜிப் அறிவித்தார்.

மேலும், புக்கிட் மெர்ச்சுவில் 20 இந்தியக் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட வீட்டுப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று பேராக் மாநில அரசு தீர்க்க வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தினார்.

எதற்காக இதெல்லாம்?: கோலகங்சார் இடைத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான வேட்பாளர் மஸ்துரா முகமட் யாஸிட்டிற்கு இந்திய சமூகம் ஆதரவு அளிக்கும் என்று தாம் நம்புவதாக நஜிப் அவரது உரையில் கூறினார்.

(இப்படி வாரிவழங்கும் சம்பவம் ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் தவறாமல் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு செம்பருத்தி மாத இதழின் “சிந்திப்போமா” பகுதியில் மாதமொன்றுக்கு குறைந்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை ஆண்டவன் அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.)