சுங்கை புசார், கோலக்கங்சார் வாக்காளர்கள் நாட்டு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஜூன் 11, 2016.

xavier jayakumar pkrஇம்மாதம் 18 ஆம் தேதி நடக்கும் சிலாங்கூர் சுங்கை புசார், பேராக் கோலக்கங்சார் இடைத் தேர்தல்கள் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வருமானம் பெறுபவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். சுதந்திரத்திற்குப் பின் நம் நாடு, மிக இக்கட்டான சட்ட ஒழுங்கு, பொருளாதார, சமய, கல்வி, அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. நாட்டைப் பெரும் அழிவிலிருந்து மீட்கும் அரிய வாய்ப்பு சுங்கை புசார், கோலக்கங்சார் ஆகிய இரு தொகுதி மக்களுக்கும் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி,  நாட்டில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை  வரி  அமல் செய்யப்பட்டபின் தீபகற்ப மலேசியாவில் நடைபெறும் முதல் நாடாளுமன்ற இடைத் தேர்தல் என்பதுடன், கடந்த ஒரு வருடக் காலத்தில் ஜி.எஸ்டியின் தாக்கத்தால் மலேசியர்கள்  அனுபவிக்கும் பொருளாதாரத் துன்பங்களுக்கு மக்கள் எவ்வாறான எதிர்வினையைத் தொடுக்கப் போகிறார்கள், எம்மாதிரியான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்துவதாக கோலக்கங்சார், சுங்கை புசார் வாக்காளர்களின் தீர்ப்பு அமைய வேண்டும்.

ஜி.எஸ்.டியை விடுத்து, மலேசியாவை ஆட்டிப்படைக்கும் இன்னொரு பிணி 1எம்டிபி விவகாரம். இதனால் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இது ஓர் உலக மகா ஊழல் என்றால் மிகையாகாது. இதில் ரிம5500 கோடி வெள்ளி மக்கள் பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ரப்பர் சிறுத்தோட்டக்காரர்களுக்கு உதவ 20 கோடி ரிங்கிட்டையும்,  தமிழ்ப்பள்ளி, மற்றும் இந்திய இயக்கங்களுக்கு கொடுக்கும் சில ஆயிரம் ரிங்கிட்களையும் காட்டி பிரதமர் நஜிப் வாக்காளர்களை விலை பேசுகிறார்.

ஆனால், மக்களின்  அடிப்படை உணவுப் பொருள்களான சீனி, மாவு, அரிசி,  எண்ணெய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகளைக்கூட நஜிப் அரசு நீக்கி விட்டது. உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை, கல்விக்கடன் தொகை குறைக்கப்பட்டுள்ளது. உயர்க்கல்விக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சிக்கன நடவடிக்கை என்றால், ரிம5500 கோடி, மக்கள் பணமில்லையா? அந்த துஷ்பிரயோகத்துக்கு என்ன விளக்கம் என்று மக்கள் கேட்பதாக இருக்க வேண்டும் இந்த இடைத்தேர்தல்களின் முடிவு.

yrsaycoolfactsஇந்த 1எம்டிபி விவகாரத்தின் மீது ஏழு உலக நாடுகள் குற்ற விசாரணையைத்  துவக்கியுள்ளன. மேலும் 1எம்டிபியுடன் அதிக நிதி தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் இயங்கி வந்த பி.எஸ்.ஐ என்ற சுவிஸ்லாந்து வங்கியை, நிதிமுறை கேடுகளுக்காக சிங்கப்பூர்  அரசாங்கம் மூடியுள்ளது.

நம் நாட்டின் நம்பகத்தன்மை  வெகுவாகப் பாதிக்கப்பட்டுப் பெரிய அளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறத் துவங்கிவிட்டது. நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை  இழந்து வருகின்றனர்.

நமது மலேசிய நாணயம் அதன் மதிப்பை இழந்து விட்டது. அதனால் இந்நாட்டு மக்களின் தேவைக்கு இறக்குமதியாகும் உடை, உணவு முதற்கொண்டு அனைத்துப் பொருட்களின் விலைகளும்  உயர்ந்து விட்டன.

நாட்டுக்கு  இவ்வளவு பாதகங்களை ஏற்படுத்தியுள்ள விவகாரங்கள் மீது  கோலகங்சார், சுங்கை புசார் நாடாளுமன்ற வாக்காளர்கள் நிச்சயமாகப் பாராமுகமாக இருக்க மாட்டார்கள். ஆளும் பாரிசான்   அரசாங்கத்துடன், குறிப்பாகப் பிரதமர் நஜிப்புடன், நேரடி தொடர்புடைய இவ்விவகாரங்களைக் கண்டித்துத் தீர்ப்பளிப்பதாக இத்தேர்தல்களின் முடிவு இருக்கும் என்று பக்காத்தான்  ஹராப்பான் எதிர்பார்க்கிறது.

உலக நாடுகளிடம், நம் நாட்டின் நன்மதிப்பைக் குறைத்துப் பல பொருளாதாரச் சிக்கலில் நாடு மாட்டிக் கொண்டுள்ளதைக் கண்டித்து நாட்டிலுள்ள கல்விமான்களும், அரசியல்வாதிகளும், மாணவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில்  விவசாயிகளும், மீனவர்களும் பங்குகொள்ள இந்த இடைத் தேர்தல்கள் அருமையான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

முக்கியமாக,  அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான மொகிதீன் யாசின், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, முன்னாள்  சட்டத்துறை  அமைச்சர் சைட்  இப்ராஹிம்  போன்றோர்கூட, பாரிசான் அரசாங்கத்துக்கு எதிரான கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.

பொதுமக்களுடன் பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணியில் உள்ள கெஅடிலான், டி.ஏபி மற்றும் அமானாவும் பிரதமரின் மிக மோசமான நிதி முறைகேடுகளைக் கடுமையாக எதிர்க்கின்றன.  உலக மக்களின் நிந்தனைக்கு ஆளான மலேசியாவை, கடும் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் இந்நாட்டு மக்களை, ஜனநாயக முறைப்படி வாக்காளர்களின் ஆதரவின்றி காப்பாற்ற முடியாது.

இன்றைய பல இன மலேசியாவின் வளர்ச்சிக்கு, நம்நாட்டின் மறுமலர்ச்சிக்கு, மக்களின் நல்வாழ்வில் அக்கறைகொண்ட தூய்மையான, இணக்கப்போக்கைக் கொண்டுள்ள ஒரு மாற்று முன்னணியின் தேவையை உணர்ந்து, பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணியை கெஅடிலான், டி.ஏபி மற்றும் அமானா ஆகிய கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன.

sgbesarcandidateஇம்முறை சிலாங்கூர்  சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணியின் அமானா கட்சியைச் சேர்ந்த அஸஹார்  சுக்கோரையும், கோலக்கங்சாரில் அமானாவின்  அஹமட் தெர்மிஸி ரம்லியையும்  வேட்பாளராக பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணி நிறுத்தியுள்ளது.

இத்தொகுதிகளின் வாக்காளர்கள் புறநகரை சார்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டு நடப்பினை நன்கு KKcandidateஅறிந்தவர்கள். தேசப்பற்றில் எந்த வகையிலும் மற்ற மலேசியர்களுக்குச்  சளைத்தவர்கள் அல்ல  என்பதை நிரூபிக்க அமானா கட்சியின் அஸஹார் சுக்கோருக்கும், அஹமட் தெர்மிஸி ரம்லிக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

மக்கள் வாக்குகள் ஜிஎஸ்டிக்கு எதிரானதாகவும், 5500 கோடி ரிங்கிட் 1எம்டிபி நம்பிக்கை மோசடிக்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும். அஸஹார் சுக்கோருக்கும், அஹமட் தெர்மிஸி ரம்லிக்கும் அளிக்கும் வாக்குகள் மக்கள் உரிமைக்கு மக்களிடும் பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும்.