சேவியர்: சுங்கை புசார் அமனா வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

 

xavier jayakumar pkrபாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஒரு ஆன்மீகவாதி, அதற்கான மரியாதைக்குப் பங்கமில்லாமல் செயல்படுவதை அவர்  உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குளைப் பெறுவதற்காக முன்னுக்குப்பின் முரணாகக் கருத்துகள் கூறும் சராசரி அரசியல் வாதிகளைப் போன்று  செயல்படக்கூடாது.

 

இஸ்லாமியர் அல்லாதோரின்  ஆதரவு தேவையில்லை என்பதனைக் காட்டும் பாணியில் ஹூடுட் சட்ட விவகாரங்களில் செயல்பட்டவர். இன்று இடைத்தேர்தலில்  முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளைக் கவர ஏதேதோ பேசக்கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

நாடு  ஓர் இக்கட்டான சூழ்நிலையை நோக்கிச் செல்வதைத் தடுக்க, எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்ட  இணக்கத்தில் அமைக்கப்பட்டது அன்றைய பக்காத்தான். அது  எல்லா மக்களுக்கும் அமைதியான, சுபிட்சமான, பாதுகாப்பான மலேசியாவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

 

ஆனால், அந்த  அடிப்படைக்கு எதிராகச் செயல்பட்டு ஹூடுட் சட்ட அமலாக்கத்தைக் கொண்டுவரும் தீர்மானத்தைக் கிளாந்தானில் கொண்டு வந்ததை எதிர்த்தே பக்காத்தானிலிருந்து ஜ.செ.க வெளியேறியது.

 

பல்லின நாட்டில் இனங்களிடையே நிலவும் நல்லுறவை அனைவரும் மதிக்க வேண்டும். அதற்கு மதிப்பளித்து நடக்க இசைவு தந்ததால், பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பு ஏற்பட்டது. பிற இன, சமயத்தைச் சார்ந்தவர்களின் உரிமையை மதிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியிடமும் அரசாங்கத்திடமும் முன்னாள் கிளாந்தான் மந்திரி புசாரும் ஆன்மீகத் தலைவருமான தோக்குரு நிக் அஸிஸ் போன்றவர்கள் வலியுறுத்தியது உண்டு என்றார் சேவியர்.

 

நிக்  அசிஸுக்குபின் பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் அமானா கட்சியின் இன்றைய தேசியத் தலைவருமான  முகமது சாபு, அமானா கட்சியின் முதுகெலும்பாகச் செயல்படும் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் போன்றவர்கள். நல்ல கொள்கைவாதிகள். சொன்ன சொல்லைக் காப்பதில், பல இனச் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து நடப்பவர்கள் என்று சேவியர் மேலும் கூறினார்.

 

ஆனால்  பாஸ் கட்சியின் தேசியத் தலைவரான ஹாடி அவாங்கின்  கொள்கையால் பக்காத்தான் கூட்டணிக்குள் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாகப் பாஸிலும் வேற்றுமை வளரத் துவங்கியது.

 

அதனால் பாஸிலிருந்து பிரிந்து  வந்தவர்களால்  அமைக்கப்பட்ட கட்சிதான் அமானா. இந்தியர்களின் விவகாரங்களில் மிக அனுசரணையுடன் நடந்து கொண்டனர். அதில் மிக முக்கியமானவர்  அமானா கட்சியின் இன்றைய தேசியத் தலைவர் முகமது சாபு.

 

காலிட் சாமாட். சேவையால் பாஸ் கட்சி இஸ்லாமியர் அல்லாதாரின் நன்மதிப்பைப் பெற்றுவந்தது. ஆனால் இன்று அவர் அமானா கட்சியின் முன்னணித் தலைவர்களில்  ஒருவராகத் திகழ்வதால் அமானா கட்சியின் மீது முஸ்லிம்  அல்லாதாரிடம்  ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஷா ஆலாம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதி. அது, மாநிலத் தலைநகராக  இருப்பதால், சில காலமாகவே அங்கு இஸ்லாமியத்துவம் மேலோங்கி இருந்து வந்தது. பிற மத இனக் கலாச்சார வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டிருந்தது. 2008 ம் ஆண்டு பாக்காத்தான் ஆட்சியை அமைத்தவுடன் முன்னைய அரசாங்கத்தின் கொள்கையைத் தொடர்ந்து வழி நடத்தச் சில அரசு அதிகாரிகளும் சித்தம் கொண்டிருந்தனர்.

 

அமானா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

 

ஆனால், இஸ்லாமியர் அல்லாதவர்கள் மத இனக் கலாச்சார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்து வருபவர் காலிட் சாமாட். அவர்  பிற  இன, மத விவகாரங்களுக்குப் பாடுபட்டதால் மலாய்க்காரர்கள் மத்தியிலும் வெறுப்பைச் சந்தித்தது உண்டு. ஆனால் ஷா ஆலாமிலும், பாஸிலும்  மற்ற இனங்களின் உரிமைக்குத் துணிவாகக் குரல் கொடுத்து வந்தவர்.

 

ஷா ஆலாமில் அம்னோவின் பலத்த எதிர்ப்பால் முடங்கிக் கிடந்த பல மொழி, சமய அமைப்பின் செயல்பாடுகள் காலிட் சாமாட் ஆதரவுடன் மீண்டும் திளைக்க ஆரம்பித்துள்ளன. கிறிஸ்துவ, புத்த,  இந்து ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் மீண்டும் ஷா ஆலாம் வட்டாரத்தில் மலரத் தொடங்கி விட்டன..

 

முக்கியமாக ஷா ஆலாம் செக்சன் 19 மாரியம்மன்  ஆலயத்திற்கு 30 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தையும் வழங்கி அரசாங்கச் செலவில் ஆலயத்தையும் கட்டி முடிக்கத் துணையாக இருந்தவர் சாமாட்.

 

இன்று நாடளவில் பேசப்படும் மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தைத் தீர்க்கவும் (அம்னோவின் எதிர்ப்பைச் சமாளிக்க) முன்நின்று செயல்பட்டவர். மலாய், ஈபான் மொழி பைபிளின் பிரதிகளைக் கைப்பற்றிய சிலாங்கூர்  இஸ்லாமிய இலாகாவின் செயலைக் கண்டித்தவர் சாமாட்.

 

அவரைப் போன்றவர்களின் சேவை மாநிலம்  முழுவதிலும் மலரவும், அவரைப் போன்ற தலைவர்கள் உருவெடுக்க நாம் நமது ஆதரவை அமானா வேட்பாளருக்குத்  தருவதே முறை.

 

அது நமது உரிமைக்கு அமைக்கும் வேலியாக விளங்கும். நம்மை, நம் சந்ததியை மலேசியாவின் உரிமையுள்ள குடிகளாக நிலைநிறுத்த நல்லவர்களின் ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது.

 

அம்னோவின் இன வாத மலேசியாவை, பல இன நாடாக மாற்ற அதிகமான காலிட் சாமாட்களும், முகமது சாபுக்களும் தேவை, சுங்கை புசார் தொகுதியில் அமானா கட்சியின் வேட்பாளராகவுள்ள அஸஹார் சுக்கோர் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். அவருக்கு வாக்களிக்கும்படி சுங்கை புசார் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.