ஆரஞ்ச் நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ள அமனாவுக்கு ‘பைத்தியம்’ பிடித்துள்ளது: பாஸ் தலைவர் சாடல்

amarபார்டி அமனா  நெகாரா  போயும்  போயும் குருமார்களின்  காவி  உடையை  நினைவுபடுத்தும்  ஆரஞ்ச்  நிறத்தையா  கட்சியின்  நிறமாக  தேர்ந்தெடுக்க  வேண்டும்  என கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட் அமார்   நிக்  அப்துல்லா சாடினார்.

அமனாவின்  சின்னம்  இந்தியாவின்  இமயம்  டிவி-இன்  சின்னத்தைப்  போன்றிருக்கிறது  என்றும்  அவர்  சொன்னார்.

அமனாவுக்குக்  கிறுக்கு  பிடித்து  விட்டது  என்றும்  ஜூன் 18  இடைத்  தேர்தலில்  அக்கட்சியின்  வேட்பாளரை   மக்கள்  புறக்கனிக்க  வேண்டும்  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.

“பாஸ்  மக்கள்  பாஸுக்குத்தான்  வாக்களிக்க  வேண்டும்.  ஆரஞ்சுக்கு  மாறி விடாதீர்கள். இந்த  ஆரஞ்ச்  கட்சிக்குக்  கிறுக்குப்  பிடித்து  விட்டது.

“பொருத்தமான  நிறத்தைகூட  தேர்ந்தெடுக்க  முடியாமல்  இருப்பதே  அமனாவின்  கிறுக்குத்தனத்துக்குத்  தக்க  சான்று.  இறைவன்  எத்தனையோ  நிறங்களைப்  படைத்திருக்க   இவர்கள்   குருமார்கள்  அணியும்  உடையின்  நிறத்தைத்  தேர்ந்தெடுத்திருப்பதை  என்னவென்பது.

“அதன்  அடையாளச்  சின்னம் (லோகோ) இமயம்  டிவியை  நினைவுபடுத்துகிறது. சரியான  தேர்வைச்  செய்வதற்கே  துப்பு  இல்லை.  இவர்கள்  எப்படித்   தலைவர்களாக  முடியும்?”, என முகம்மட்  அமார்  நேற்றிரவு  ஒரு  செராமாவில்  வினவினார்.