சேவியர்: தொழில் நுட்பப் பல்கலைக்கழகமா? சமய ஆய்வு பல்கலைக்கழகமா?

 

Dr-Xavier-Jeyakumarமலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் எப்பொழுது சமய ஆய்வு பல்கலைக்கழகமாக மாறியது? அப்படியே மற்றச் சமயங்களைப் பற்றிப் படிக்க வேண்டும், போதிக்க வேண்டும்  என்றால்,  அச்சமயங்களில் உள்ள சிறந்த போதனைகளைப் போதிக்க வேண்டும் அது நாட்டிற்கு நன்மை பயக்கும்.

ஆனால் , மற்றவர்களைக் கேவலப்படுத்தும், சிறுமைப்படுத்தும் தவறான தகவல்களை மாணவர்களுக்கு  அளிப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இதுபோன்ற செயல்கள் கல்வி அமைச்சின்  ஆதரவின்றி அரசாங்க பல்கலைக்கழகங்களில் துணிச்சலாக மேடை ஏற முடியாது. அதனால் இதற்கு கல்வி அமைச்சே தக்க பதில் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் அரசாங்க உயர்கல்வி நிலையங்களில் இது போன்ற சமய வாதங்கள் கையாளப்படுவது, ஒரு தேசியக் கீழறுப்பு செயலாகக் கொண்டு அதனைப் போலீஸ் ஏன் விசாரணை செய்யக் கூடாது?  சம்பந்தப்பட்டவர்களை ஏன் உடனே பதவி நீக்கம் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித்தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

இது போன்ற செயல்கள் நாட்டுக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ நன்மையளிக்காது. இம்மாதிரியான தகவல்கள் மாணவர்களையும், மலேசியர்களையும் வீண் விவாதங்களுக்கு இட்டுச் செல்லும், நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும்.

உலக தரவரிசையில் மலேசிய யுனிவர்சிட்டிகள் பின் நோக்கி செல்லுவதன் காரணங்களும் இப்பொழுது தெளிவாகிறது. இப்படிப்பட்ட அறிவிலிகள் பல்கலைக்கழகங்களில் பாடம் நடத்தினால் பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் நம் பட்டதாரிகளின் தரம் எப்படி மேம்படும். அவர்கள்  எப்படி  உலகளவில் ஆற்றல் மிக்கவர்களாக உயரமுடியும் போட்டிபோட  முடியுமென்று கேள்வி எழுப்பினார் டாக்டர் சேவியர்.

இவை  அனைத்தும் (பிடிஎன்) தேசியக் குடிமை பயிற்சி எனப்படும் திட்டத்தின் பின் விளைவுகளாகும். இன வாதத்தை முக்கிய அம்சமாகக் கொண்டு, அரசாங்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தால், சமய,  இன அவமதிப்பை எப்படித் தடுக்க முடியும்?

இந்நாடு தொடர்ந்து முன்னேற்றம் பெற எல்லா மலேசியர்களின் தியாகத்திற்கும், திறமைக்கும், மதிப்பு அளித்து அவர்களை மரியாதையுடன் நடத்தும் பணி முறை கலாச்சாரத்தை மலேசிய அரசாங்க இலாக்காக்கள் தொடங்கி  இல்லங்கள் வரை வளர்க்க வேண்டும். 

அதுவே, இந்நாட்டு  முன்னேற்றத்திற்கு பாதையமைக்கும், நாட்டின் நீண்டக் கால நன்மைக்கு  வழி அமைக்கும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.