இன்று காலை கோலா கங்சார், எஸ்எம்கே ராஜா மூடா மூசா வாக்களிப்பு மையத்துக்கு வருகை புரிந்த தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் ஹஷிம் அப்துல்லா, காலை மணி 10க்கே 24விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்து விட்டதாகக் கூறினார். வானிலை நன்றாக இருந்தால் 75விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் என்றவர் நம்புகிறார்.
“அதிகமதிகமாக வாக்காளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை எங்கள் இலக்கான 75விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம், அதையும் தாண்டலாம்”, என்றவர் சொன்னார்.
வேட்பாளர்களைக் காணும்போதெல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பரிப்பது பற்றிக் குறிப்பிட்ட ஹஷிம் தேர்தலில் அதுவெல்லாம் சகஜம்தான் என்றார்.
அவர்கள் மகிழ்ச்சியில் ஆடலாம், கூச்சலிடலாம், ஆர்ப்பரிக்கலாம். ஆனால், சண்டையிடக் கூடாது. தேர்தல் என்றால் சந்தடி இருக்கத்தான் செய்யும். சந்தடி இல்லாத தேர்தல் என்ன தேர்தல் என்று அவர் சொன்னார்.
சில வாக்களிப்பு மையங்களில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி வினவியதற்கு இசி ஊடகங்கள் வாக்களிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தடை செய்யவில்லை என்றார்.