பி.பாலன் ஒரு தொழிலாளி. வேலை செய்யும்போது நிகழ்ந்த விபத்தில் முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக இடைக்குக் கீழே உள்ள உடல் பகுதி செயலிழந்து போன நிலையில் இப்போது வீட்டில் இருந்து வருகிறார்.
ஆனால், அவர் குடியிருக்கும் வீட்டுக்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.
“என் அக்காள்மார் இருவரும் அவர்களின் மகள்கள் மூவரும் என்னுடன்தான் இருக்கிறார்கள். அக்காள்கள் இருவருமே தனித்து வாழும் தாய்கள்”, என பாலன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பாலனால் வேலை செய்ய இயலாது என்பதால் அவரின் சகோதரிகளில் ஒருவரான பி.தேவிதான் அக்குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறார்.
“நான் வேலை செய்து ஓரளவு உதவுகிறேன். பழங்கள் வெட்டுகிறேன். ஒரு நாளைக்கு ரிம30 கிடைக்கிறது”, என்றாரவர்.
அக்குடும்பம் விரைவிலேயே வீடற்ற குடும்பமாகி விடும் அபாயம் உருவாகியுள்ளது. சிரம்பானில் அவர்கள் குடியிருக்கும் வீட்டை அங்குள்ள வங்கி ஏலத்துக் கொண்டு வந்துள்ளது.
பாலன், 2005 அந்த வீட்டை வாங்குவதற்கு வங்கியில் ரிம115,000 கடன் வாங்கி இருந்தார்.
கடந்த ஆண்டில் பாலனுக்கு விபத்து ஏற்படுவதற்குமுன் ஜூன் 22இல் கொடுபடாத கடன் தொகைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு வருமாறு கூறும் கடிதம் அவர்களுக்கு வந்தது. பின்னர் அந்தத் தொகைகள் செலுத்தப்பட்டு அந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டது.
ஆனால், 2015 ஜூலைக்குப் பிறகு பாலனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஏழு மாதங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அவற்றில் நான்கு மாதங்கள் ‘கோமா’வில்.
2015 அக்டோபரில் வங்கி கொடுபடாத கடன் தொகையைக் கேட்டு மீண்டும் கடிதம் எழுதியது. தேவி வங்கி சென்று அதனுடன் பேச்சு நடத்தினார்.
கடனுக்குக் காப்புறுதி இருக்கிறது. ஆனால், போதுமான மருத்துவச் சான்று இல்லை என்று கூறிக் காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்க முன்வரவில்லை. வங்கியோ வீட்டை ஏலத்துக் கொண்டுவரும் ஏற்பாடுகளில் ஈடுபட்டது.
பாலன் வாதத்தால் செயலிழந்து கிடப்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை வரும்வரையில் காத்திருக்கும் பொறுமை வங்கிக்கு இல்லை என அந்தக் குடும்பத்தார் முறையிட்டனர். அந்த அறிக்கை ஜனவரியில்தான் கிடைத்தது.
பின்னர், அவர்களின் வீட்டை சிரம்பான் உயர் நீதிமன்றம் ரிம150,000-க்கு ஏலத்துக்கு விட்டிருக்கும் செய்தி தெரிய வந்தது.
இப்போது பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) பாலனுக்கு உதவ முன்வந்துள்ளது. பாலனின் நிலை அறிந்தும் அவரது வீட்டை ஏலம் விடுவதற்கு வங்கி அவசரம் காட்டியது ஏன் என்று அது வினவியது.
கடந்த மாதம் பிஎஸ்எம் கோலாலும்பூரில் உள்ள அந்த வங்கியின்
தலைமையகத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்து வங்கி உயர் அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றைக் கொடுத்தது.
ஆனாலும், ஏலத்தை நடத்தி முடிப்பதில் வங்கி பிடிவாதமாக உள்ளது.
“மற்ற வங்கிகளில் ஏல விற்பனையை நடத்தி முடிக்க பல ஆண்டுகள் ஆகின்றன.
“ஆனால், உடல்குறையுள்ள ஒருவரின் வீட்டை, அவர்கள் உண்மையிலேயே சிரமப்படுவதை அறிந்தும் ஒன்பதே மாதங்களில் ஏலத்துக்குக் கொண்டு வந்து விட்டது இந்த வங்கி”,”, என சிரம்பான் பிஎஸ்எம் செயலாளர் எஸ். தினகரன் கூறினார்.
இதனிடையே பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன், வங்கி அதன் முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதன் தலைமையகத்துக்கு வெளியில் முகாமிடப் போவதாகக் கூறினார்,
மலேசியாகினி வங்கியைத் தொடர்புகொண்டு அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறது.


























பேருக்கு மத்தியில் bin என்று இருந்தால் நிலைமை வேறு ஆக இருக்கும். இதுதான் 1malaysia .