எம்எச்370: முத்தரப்புப் பேச்சில் தேடும் நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்யப்படலாம் என்ற அச்சம்

mh370எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், இன்று கோலாலும்பூரில் தொடங்கும் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்புப் பேச்சுகளில்  காணாமல்போன அவ்விமானத்தைத்  தேடும்   நடவடிக்கையைக்   கைவிடுவதென  முடிவு செய்யப்படலாம் என்று   கவலை கொண்டுள்ளனர்.

எம்எச்370 குடும்ப ஆதரவுக் குழுவான Voice 370 தேடும் நடவடிக்கையைக் கைவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியது.

தேடும் நடவடிக்கையில்-  அந்நடவடிக்கை இப்போது மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு   அப்பால் உள்ள கடல்பகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது-   இதுவரை   எதுவும்   காணப்படவில்லை  என்பதை அக்குடும்பத்தார்  கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.

2014, மார்ச் மாதம் 239 பயணிகளை    ஏற்றிக்கொண்டு   கோலாலும்பூரிலி்ருந்து  பெய்ஜிங்  புறப்பட்ட அவ்விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் மாயமாய்   மறைந்தது.

தென்னாப்ரிக்கா, மொசாம்பிக், மோரிசியஸ் ரியூனியன் தீவுகள் ஆகிய  இடங்களில்   கண்டெடுக்கப்பட்ட   ஐந்து  சிதைவுகள் எம்எச்370 விமானத்தினுடையவை   என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.  ஆனால், விமானத்தின் பெரும்பகுதி என்னவானது என்பதும்   விமானம் காணாமல்போனது   எப்படி   என்பதும்  இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது.

“இதில், தேடுவதற்காக    நிர்ணயிக்கப்பட்ட 120,000 சதுர கிலோமீட்டர் பகுதியில்   தேடிப் பார்த்த பின்னரும் நம்பத்தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றால்,    தேடல்    நடவடிக்கை   முடிவுக்குக்   கொண்டுவரப்படும்   என்று   அடிக்கடி கூறப்படுவதுதான் கலக்கமளிக்கிறது” , என Voice 370 கூறியது.