மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் கவனக்குறைவுதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறை உயர் அதிகாரி அஹமட் சர்பைனிக்கு மரணத்துக்குக் காரணம் என முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே தலைமையில் மேல்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்ததில் உயர் நீதிமன்றம் தவறிழைத்து விட்டது எனக் கூறிற்று.
இரண்டு இடங்களில் எம்ஏசிசி கவனக்குறைவாக இருந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணத்தை அடுத்து சந்தேகத்துக்குரியவர்கள் அல்லது சாட்சிகளின் விசாரணைகளைக் கீழ்த் தளத்தில்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு இருக்கையில் அஹமட் சப்ரையினியை மூன்றாவது தளத்துக்குக் கொண்டு சென்றது ஒன்று.
இரண்டாவதாக, கண்காணிப்பு இல்லாமல் அஹமட் சப்ரைனியைத் தனியே விட்டுச் சென்றது.
இழப்பீடாக ரிம210,000 -மும் நல்லடக்கச் சடங்குகளுக்காக ரிம3,000-மும் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் வழக்குச் செலவாக எம்ஏசிசியும் அரசாங்கமும் ரிம20,000 கொடுக்கும்படியும் அது உத்தரவிட்டது.