எதிரணியின் தோல்விக்கு எதிரணியே காரணம்- ஆய்வாளர்கள்

analystஅண்மைய  இடைத்  தேர்தல்  தோல்விக்கு  வாக்காளர்  எண்ணிக்கை  குறைந்ததுதான்  காரணம்  என்று   பக்கத்தான்  கூறிக்  கொண்டிருக்கிறது.  அப்படி  வாக்காளர்கள்  வாக்களிக்க  வராமல்   போனதற்குக்  காரணமே   எதிரணியினர்தான்  என்கிறார்கள்  அரசியல்  ஆய்வாளர்கள்.

ஒண்டிக்கு-ஒண்டி  என்று  போட்டியிட்டிருக்க  வேண்டும். அதைச்  செய்யத்  தவறியது  ஒரு  காரணம்  என்று   அரசியல்  ஆய்வாளர்   லியு  வூய்  செர்ன்   கூறினார்.

“சரவாக்  மாநிலத்   தேர்தல்களிலிருந்து   பாடம்  கற்றிருக்க   வேண்டும். அங்கு   டிஏபி  படுதோல்வி  கண்டதற்குப்  பல்முனைப்   போட்டிகளும்  ஒரு  காரணம்”, என  லியு  மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

ஜூன் 18  கோலா  கங்சார்  இடைத்  தேர்தலில்  71விழுக்காட்டு   வாக்காளர்கள்தான்   வாக்களிக்க  வந்தார்கள். 2013  பொதுத்  தேர்தலில்  84.1 விழுக்காட்டினர்  வந்தனர். ஆக,  இந்த  இடைத்   தேர்தலில்  சுமார்  4,800 வாக்காளர்கள்  வாக்களிக்க  வரவில்லை.

சுங்கை   புசாரில்  2013  பொதுத்  தேர்தலுடன் ஒப்பிடும்போது  74  விழுக்காட்டினர்தான்  வந்திருந்தார்கள். (2013-இல் 88 விழுக்காட்டினர்).  பத்தாயிரத்துக்கு  மேற்பட்ட  வாக்காளர்கள்  வாக்குச்  சாவடிகளுக்கு  வரவில்லை.

“டிஏபி   அதன்   பரப்புரை  நெடுகிலும்  இடைத்  தேர்தல்களை  அடுத்த   பொதுத்   தேர்தலில்  அரசாங்கம்  மாறப்  போகிறது  என்பதற்கு  ஒரு  தொடக்கமாக   சித்திரித்துக்  காண்பித்து  வந்தது.  .

“ஆனால்,  மக்கள்,  குறிப்பாக,  இளம்  வயதினரும்    நடுத்தர  வயதினரும்  அதனால்  கவரப்படவில்லை. பக்கத்தான்  ஹராபானைவிட  முந்தைய  பக்கத்தான்  ஹராபான்மீதே  அவர்களுக்கு  அதிகம்  நம்பிக்கை  இருந்தது”, என்று  லியு   கூறினார்

அப்போது  நடுத்தர  வகுப்பினரும்  இளம்  வயதினரும்  அரசாங்கத்தை  மாற்றும்  முயற்சியில்  துணிந்து  ஈடுபட்டனர்.  ஆனால்,  இப்போது  அவர்கள்,    பொருளாதாரம்  ஏற்ற இறக்கமாக  இருப்பதாலும்  அனைத்துலக   பயங்கரவாத   மிரட்டல்  நிறைந்த  ஒரு  சூழல்  இருப்பதாலும்    நிலைத்தன்மையையே  விரும்புகிறார்கள்.

“மேலும்,  பிஎன்  அல்லது  எதிரணி  இரண்டில்  ஏதாவது  ஒன்றைத்   தேர்ந்தெடுக்க   வேண்டும்  என்ற   அவசியம்   இருப்பதாகவும்  மக்கள்  எண்ணவில்லை. அதனால்தான்  எதிர்ப்பைக்  காட்டும்   வகையில்  வாக்களிக்க  வராமலேயே  இருந்து   விட்டார்கள்”, என்றும்   அவர்  சொன்னார்.

எதிரணியில்  பிளவு

வாக்காளர்   எண்ணிக்கை   குறைந்ததற்கு  எதிரணியினர்  பிளவுபட்டுக்   கிடந்ததும்  ஒரு  காரணம்  என்கிறார்   இன்னொரு  அரசியல்   ஆய்வாளரான   தாங்   ஆ  சாய்.

“பிஎன்   வலுப்பெற்றிருந்ததாகவோ  திறமையாக  போட்டியிட்டதாகவோ  கூற  முடியாது.  எதிரணியில்  உள்ளுக்குள்  நிறைய   பிரச்னைகள்.  அதனால்  வெற்றிபெறத்   தவறி  விட்டது”,  என்றாரவர்.

எதிரணியின்  பின்னடைவுக்கு  அன்வார்  இல்லாததும்  ஒரு  காரணம்  என்று  அவர்  சொன்னார்.

வாக்காளர்  எண்ணிக்கை  குறைந்திருந்ததில்  ஒன்றும் புதுமை  இல்லை.  எல்லா  இடைத்  தேர்தல்களிலும்  அதுதான்  நிலைமை  என்று  தாங்   கூறினார்.

“வாக்காளர்கள்  இடைத்  தேர்தலைப்  பெரிதாக  நினைப்பதில்லை”,  என்று  தேசிய  பேராசிரிய  மன்றத்தின்   அரசியல்,  பாதுகாப்பு,  அனைத்துலக  விவகாரப்  பகுதித்   தலைவர்  முகம்மட்  முஸ்தபா  இஷாக்   கூறினார்.

“எதிரணி  வென்றாலும்  பிஎன்   வென்றாலும்  அதனால்  எதுவும்  மாறப்போவதில்லை  என்று   கருதியதால்  அவர்களுக்கு   வாக்களிப்பதில்    விருப்பமில்லாது  போயிற்று.

“சிலர்,  அடுத்த  பொதுத்   தேர்தலில்  மட்டும்  வாக்களிப்பது  என்று  முடிவு  செய்திருக்கலாம்”, எனவும்  முஸ்தபா  தெரிவித்தார்.