மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் விரைவில் அப்பதவியிலிருந்து விலகுகிறார். அவரின் இடத்துக்குச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
பதவி விலக அபு காசிமுக்குப் பிரதமர் துறையிலிருந்து நெருக்குதல் வந்ததாம். தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் ஆகஸ்ட் 1-இல் பதவி விலகுகிறார்.
துணைத் தலைமை ஆணையர் முகம்மட் ஷுக்ரி அப்துலும் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.. அதே வேளை எம்ஏசிசி-இன் மூன்று வாரியங்கள் ஆள்களின்றிக் காலியாகக் கிடக்கின்றன.
நடவடிக்கை பரிசீலனை வாரியம்(ஓஆர்பி), ஆலோசனை மற்றும் ஊழல்தடுப்பு ஆணையம்(சிசிபிபி) ஆகிய இரண்டும் பிப்ரவரி 24-இலிருந்து காலியாகக் கிடக்கின்றன. ஊழல்தடுப்புச் சிறப்புக் குழுவும் அதற்கான ஆள்கள் நியமிக்கப்படாமல் கடந்த மாதத்திலிருந்து காலியாக விடப்பட்டுள்ளது.
ஓஆர்பி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் எதுவும் புரியவில்லை என்ற சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலியின் முடிவைக் குறைகூறியதாகக் கூறப்படுகிறது. அது மேற்கொண்டு விசாரணை தேவை என்று வலியுறுத்தியதாம்.
அபு காசிம் பதவி விலகப் போகிறார் என ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே வதந்திகள் உலவி வருகின்றன.