முப்தியின் தீவிரவாத கருத்தைக் கேட்டு ‘மிதவாத’ நஜிப் மெளனம் காப்பது ஏன்?

silenceஹுடுட்  சட்டம்  கொண்டுவரப்படுவதை  எதிர்க்கும்  டிஏபி-யை   ‘kafir harbi’ என்று  பகாங்  முப்தி   முத்திரை  குத்தியிருப்பது   குறித்து   எதுவும்  கருத்துரைக்காமல்  மெளனம்  சாதிக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  பிகேஆர்  சாடியது.

“வன்முறையைத்   தூண்டிவிடக்  கூடியது  பகாங்  முப்தியின்  அடாவடிப்  பேச்சு.  இது  மோசமான,  கொடூரமான  விளைவுகளை  ஏற்படுத்தலாம்”, என  பிகேஆர்  கூறியது.

“தீவிரவாத  மிக்கதும்  சீண்டிவிடும்  தன்மை  கொண்டதுமான  இப்படிப்பட்ட  கருத்துகளைக்  கேட்டு  மிதவாதம்  போதிக்கும்  நஜிப்பும்  பிஎன்னும்  மெளனமாக  இருப்பதுதான் வியப்பளிக்கிறது.

“முஸ்லிம்களுக்கு  எதிராக  போரில்  குதிக்கும்  முஸ்லிம்- அல்லாதாரே  காபீர்  ஹர்பி  எனப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை  எதிர்த்துப்  போராடலாம்,  கொல்லவும்  செய்யலாம்”,  என  பிகேஆர்  மத்திய  செயல்குழு உறுப்பினர்  லத்தீபா  கோயா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“இஸ்லாம்  அமைதியை  வலியுறுத்தும்  ஒரு  சமயம்  என்பதால்  மக்களைக்  கொல்லச்  சொல்லித்  தூண்டிவிடுவது  இஸ்லாத்தின்  அடிப்படைக்  கொள்கையையே  மீறுவதாகும்”,  என்று  குறிப்பிட்ட  லத்தீபா,  “முப்தியின்   பேச்சு  பொறுப்பற்றது,  அபாயகரமானது” என்று  வருணித்தார்.