டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தலைமையில் செயல்படும் மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கத்தில் சேர்ந்து கொள்ள முன்னாள் இரண்டாவது நிதி அமைச்சரான ஹுஸ்னி ஹனாட்ஸ்லாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜைட் இப்ராகிம்.
ஹுஸ்னி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய செய்தி அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அவர் அம்னோ பொருளாளர் பதவி உள்பட அம்னோவிலும் பிஎன்னிலும் வகித்த எல்லாப் பதவிகளையுமே துறந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது.
நேற்று ஹுஸ்னி இரண்டாவது நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறார் என்பதை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சொந்த காரணங்களுக்காக அவர் அவ்வாறு செய்கிறார் என்றார்.
ஆனால், தம்புன் எம்பியான ஹுஸ்னி, பதவி விலகுவதற்குக் காரணம் 1எம்டிபி ஊழல்தான் என்று அரசல்புரசலாக பேசப்படுகிறது.
முன்னாள் பிரதமர்துறை அமைச்சரான ஜைட், 2008-இல் அரசாங்கத்தில் தாம் அனுபவித்த சிரமங்களை ஹுஸ்னி இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்று ஜைட் கூறினார்.
“அன்று நான் பதவி விலகியபோது பொறுமை வேண்டும் என்று போதித்தார் ஹுஸ்னி. இப்போது அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்”, என்றார். ஜைட், விதிக் கட்டுப்பாடின்றி தடுத்து வைக்க வகை செய்யும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து 2008-இல் அப்துல்லா படாவியின் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.
மகாதிர் தலைமையில் செயல்படும் மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம் நஜிப்பைப் பதவியிலிருந்து அகற்றவும் பல மாற்றங்களைச் செய்யவும் நோக்கம் கொண்டிருக்கிறது.