ஹுஸ்னியும் வாஹிட்டும் 1எம்டிபி ஊழலுக்குப் பயந்து ஓடினார்களா? மாபுஸ் கேள்வி

mafuz1எம்டிபி  ஊழல்  சர்ச்சை  தொடரும்  வேளையில்  நிதி  விவகாரங்களைக்  கவனித்து  வந்த  இரு   அமைச்சர்கள் ,  ஹுஸ்னி  ஹனட்ஸ்லாவும்   அப்துல்  வாஹிட்  ஒமாரும்  பதவி  விலகியது  ஏன்  என்று  பாஸ்  எம்பி  மாபுஸ்  ஒமார்  கேட்கிறார்.

“ஹுஸ்னியும்  வாஹிட்டும்  பதவி  விலகியது   ஆயிரத்தொரு  கேள்விகளை  எழுப்புகிறது….. நாட்டை  உலுக்கிக் கொண்டிருக்கும்  1எம்டிபி  ஊழலிருந்து  அவ்விருவரும்  விலகி  ஓடியது  ஏன்”, என  பொக்கோக்  செனா  எம்பி   ஓர்  அறிக்கையில்  வினவினார்.

நேற்று,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அமைச்சரவை  மாற்றத்தை   அறிவித்தபோது  ஹுஸ்னி  சொந்த  காரணங்களுக்காக  இரண்டாவது  நிதி  அமைச்சர்  பதவியிலிருந்து  விலகிக் கொண்டிருப்பதாக  தெரிவித்தார்.

அதன்  பிறகு  ஹுஸ்னி  அம்னோ  பொருளாளர்  உள்பட  அம்னோவிலும்  பிஎன்னிலும்  வகித்த  எல்லாப்   பதவிகளிலிருந்துமே  விலகிக்  கொண்டிருப்பதாக  அறிவித்தார்.

இதனிடையே,  முன்னாள்  மே  பேங்க்  சிஇஓ-வான  வாஹிட்,  ஜூன்  4-இல்  தம்  செனட்டர்  பதவிக்  காலம்  முடிவுக்கு  வந்தபோதே  பதவியிலிருந்து  விலகவும்  விரும்பியதாக  தெரிகிறது.

“அமைச்சர்  பதவியில்  இருந்ததால்  நாட்டின்  மிகப்  பெரிய  ஊழலில்(1எம்டிபி)  நஜிப்  சம்பந்தப்பட்டிருப்பது  பற்றி  வெளியில்  தெரியாத   விசயங்களைத்  தெரிந்து  வைத்திருக்கும்   அவர்கள்  நஜிப்புடன்  சதியில்  கூட்டுச்  சேர விரும்பவில்லை  என்று  நினைக்கிறேன்”,  என  மாபுஸ்  கூறிக்  கொண்டார்.

அவர்களின்  பதவி  விலகல்  பிரதமருக்கு  அமைதியான  முறையில்  தெரிவிக்கப்படும்  எதிர்ப்பு   என்று  நினைக்கும்  மாபுஸ்  அவ்விருவரும்  “மலேசியாவைக்  காக்க”  மக்களுடன்  இணைய  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டார்.