பகாங் மாநில முப்தியின் அறிக்கையின் பிரதிபலிப்பா பூச்சோங் ஜெயா குண்டு வெடிப்பு?, சேவியர் கேட்கிறார்

 

xavierமலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் நாட்டை மிக  ஆபத்தான காலத்தை நோக்கி இட்டுச் செல்கிறார் என்பதற்கு  சான்றாக பூச்சோங் ஜெயா ப்போல்வட் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இன சமய விவகாரங்களை தூண்டும் ஆபத்தான போக்கினை  எல்லா மலேசியர்களும் நீண்டக்காலமாக தவிர்த்து வந்துள்ளனர்.

 

ஆனால், மலேசிய மக்களின்  உயிருக்கு  ஆபத்தை விளைவிக்கும் கூக்குரல் பிரதமரின் சொந்தமாநிலமான  பகாங்கிலிருந்து, அதுவும் மாநில முப்தியிடமிருந்து வந்துள்ளதை மக்கள் எதார்த்தமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. முப்தியின் அறிவிப்பு  உள்நோக்கம்  கொண்ட ஒரு செயலாகும் என்றார் ஶ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

கடந்த மாதம் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடியின் தனி நபர்  ஹூடுட் சட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதின் வழி, ஏற்பட்ட சலசலப்பினால் நஜிப் அரசாங்கம் சுங்கை புசார் மற்றும் கோலக்கங்சார்  இடைத்தேர்தல்களில் வெற்றிகளை அடைந்தது. அதனால் மேலும் ஊக்கமடைந்துள்ள நஜிப் அரசாங்கத்தின் ஆழம் பார்க்கும் செயலாக பகாங் மாநில முப்தியின் அறிக்கை இருக்கிறது என்றார் சேவியர் ஜெயக்குமார்.

 

கிளாந்தான்  ஹூடுட் சட்ட விவகாரம் தொடர்பாக குறிப்பாக ஜ.செ.கவையும் முஸ்லிம் அல்லாதோரையும் காஃபீர்  ஹர்பி  என்று அதாவது இஸ்லாமுக்காக  மற்றவர்களின்  உயிரை பறிப்பது, அல்லது ரத்தம் சிந்துவது புனிதம் என்ற அர்த்தத்தில் கருத்துரைத்துள்ளார்.

 

அப்படி பேசுவது, செயல் படுவது அல்லது சித்தாந்தத்தை விதைப்பது நாட்டுக்கு  எவ்வளவு ஆபத்தானது என்பதனை  அனைவரும் அறிவர். ஆனால் அதற்கு எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காத பாகாங் அம்னோ-பாரிசான் மற்றும் பிரதமர் நஜிப் முதல் பாரிசான் அமைச்சர்கள் வரை மௌனம் சாதிப்பது அவரின் கருத்தை அவர்கள்  ஆதரிப்பதை  உணர்த்துகிறது.

 

கிளாந்தான் ஹூடுட்  சட்டம் அமலாக்க  விவகாரத்தில் பகாங் முப்தி இப்படி  ஆபத்தான  அறிக்கை விடுவதன் நோக்கம் என்ன? அச்சட்டம்  அமல் செய்வதும், செய்யாமல் இருப்பதும் முழுக்க  கிளாந்தான் விவகாரம். ஆனால் வேறொரு மாநில முப்தியான அப்துல் ரஹ்மான்  ஒஸ்மான் அறிக்கை விட்டிருப்பதும், பகாங் மாநில பாரிசான் அரசுக்கும், அரசருக்கும் கட்டுப்பட்டு சமயப் பணி செய்ய வேண்டிய இவர் கிளாந்தான் பாஸ் அரசாங்கத்தின் ஹூடுட் கொள்கைக்காக யுத்தகோலம் பூண்டது எதற்காக என்று கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

yrsayhafirபகாங் மாநிலத்ததில்  இஸ்லாமை மேம்படுத்த, முஸ்லீம்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எவ்வளவோ  செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தை சார்ந்த முக்கிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின்  ஆடம்பர  வாழ்க்கை, மற்றும் அப்படிப்பட்ட ஆடம்பர வாழ்வுக்கு  ஈட்டப்படும்  செல்வங்கள் இஸ்லாமிய முறைப்படி ஈட்டப்பட வேண்டியதின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த அந்த முப்தி என்ன செய்துள்ளார் என்று வினவினார்  சேவியர் ஜெயக்குமார்.

 

மாநிலத்துக்கு, அறவே தொடர்பில்லாத ஒரு விவகாரம்மீது, மக்களின்  கவனத்தை எளிதில் ஈர்க்கும் உணர்ச்சிகரமான விவகாரம்மீது  மிக ஆபாத்தான  ஒரு கருத்தை பதிவு செய்ததின் வழி, பல இளம் இஸ்லாமியர்களிடம் தவறான கருத்தை விதைத்து விட்டார் அந்த முப்தி.

 

அதன் பின்விளைவாகவே பூச்சோங் ஜெயா ப்போல்வட் குண்டு வெடிப்பை கருத வேண்டியுள்ளது. இந்தோனிசியாவின் பாலித் தீவு குண்டு வெடிப்பு பாணியில் முஸ்லிம் அல்லாதவர்கள்  அதிகம் ஒன்றுகூடும் இடத்தை முற்றுகை இட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்தவர்கள், சொத்துகளை இழந்தவர்களும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதால், அதற்கான மூலக் காரணம் என்ன என்பது விளங்குகிறது.

 

நம் நாடு வளர்ச்சிக்கு அதிகம் நம்பியிருப்பது சுற்றுலாத்துறை, அன்னிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி. அவை  அனைத்தும் அகில உலக நாடுகளிடம் நாம் கொண்டுள்ள நல்லுறவை அடிப்படையாக  கொண்டது. நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அமைதியே வெளிஉலக மதிப்புக்கும், நாட்டின்  உயர்வுக்கும் வழியமைத்துள்ளன.

 

வெறித்தனமான அரசியலுக்கு, சுய அரசியல் இலாபத்துக்கு நாட்டின் நலனை அழித்து விடாமல் பிரதமர் நஜிப் துன் ராசாக் செயல்பட வேண்டும்  என்று கோரிக்கை விட்டுள்ளார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.