மலேசியா எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரும் கடப்பாட்டில் அக்கறை கொண்டிருக்கிறது என அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. என். தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அது இப்படி வினவியது.
அந்நால்வரும் 2013–இல், போலீஸ் காவலில் இருந்த தர்மேந்திரனைப் படுமோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி அவரது இறப்புக்குக் காரணமாக இருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டிருந்தனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நேற்று அவர்களை விடுவித்தது.
குற்றம் நிகழ்ந்திருப்பது அப்பட்டமாக தெரிந்துகூட மலேசிய போலீசாரால் குற்றத்துக்குப் பொறுப்பேற்பதைத் தொடர்ந்து தவிர்க்க முடிகிறதே என்று அம்னெஸ்டி இண்டர்நேசனலின் தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் வட்டார துணை இயக்குனர் ஜோசப் பெனடிக்ட் நேற்று ஓர் அறிக்கையில் அங்கலாய்த்துக் கொண்டார்.