அரசியல்வாதிகள் ‘அசைக்கமுடியாதவர்களாக” இருப்பதுதான் மலேசிய அரசியலின் பிரச்னை

invinஊழல்  குற்றச்சாட்டுகள்  பிஎன்மீதும்  எதிரணியான  பக்கத்தான்  ஹராபான்மீது  ஒரு  கரிய  நிழலாக  படர்ந்திருக்கிறது  என்று  கூறும்  அரசியல்  ஆய்வாளர்   பேராசிரியர்  ஹம்டான்  ஒஸ்மான்  தொட முடியாதவர்  என்ற  எண்ணம்  எந்த  அரசியல்வாதிக்கும்  வந்துவிடக்  கூடாது  என்கிறார்.

ஆனால்,  மலேசியாவில்  ஆதரவாளார்கள்   தங்கள்  தலைவர்களுக்காக  “ஹீரோக்களாக  மாறி  மூடிமறைக்கும்  வேலையில்”  ஈடுபடும்  போக்குக்  காணப்படுகிறது.

“இது  அவர்களை (அரசியல்வாதிகளை)  தொட  முடியாதவர்களாக்கி  விடுகிறது. பார்க்கப்போனால்  அவர்கள்தாம்  நேர்மை  என்னும்  உயர்ந்த  நெறிமுறையைக்  கட்டிக்காக்க  வேண்டிய  நிலையில்  இருப்பவர்கள்”.

முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீதான  ஊழல்  குற்றச்சாட்டு  குறித்துக்  கருத்துரைத்தபோது  யுனிவர்சிடி  சிலாங்கூர்   பேராசிரியரான  ஹ்ம்டான்  மலேசியாகினியிடம்  இவ்வாறு  கூறினார்.

ஒரு  புறம்  குற்றம்  சாட்டப்பட்ட  லிம்  பதவி  விலக  வேண்டும்  என்று  கூறப்படுகிறது.  மறுபுறம்    டிஏபி  அது  அரசியல்  நோக்கம்  கொண்ட  குற்றச்சாட்டு  என்று  நினைப்பதால்  லிம்  பதவி  விலக  வேண்டியதில்லை  என்கிறது..

மலேசிய   அரசியல்வாதிகள்  தொட  முடியாதவர்களாக   மாறுவதற்கு இப்படிப்பட்ட  ஓர்  எதிர்வினைதான்  காரணம்  என்கிறார்  ஹம்டான்.

“இதுதான்  மலேசிய  அரசியல். இதற்குத் தீர்வு  காணாதவரை  பிரச்னை  தொடர்ந்து  இருக்கத்தான்  செய்யும்.  நாமும்  (ஊழல்-தடுப்புமீது)  அலங்காரமாக  பேசிக்  கொண்டிருப்போம்,  சுலோகங்களை  முழங்கிக்  கொண்டிருப்போம்”,  என்றாரவர்.

இப்பிரச்னை  அரசியலின்  இரண்டு  பக்கங்களிலுமே உண்டு. 1எம்டிபி,  ரிம2.6 பில்லியன்  ஊழல்கள்  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கைகளும்  எழுந்தன  என்று  ஹம்டான்  கூறினார்.

அம்னோவில்,  நஜிப்பைக்  குறைகூறியவர்கள்,  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்  உள்பட,  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டனர்.

அம்னோ  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டால்  இடைநீக்கம்  செய்யப்பட்டார்.

அம்னோவிலிருந்து  வெளியேற்றப்பட்டதை  அடுத்து  புதிய  கட்சி  தொடங்குவதா  அல்லது  எதிர்க்கட்சிகளில்  ஏதாவது  ஒன்றில் சேர்வதா  என்று  முகைதின்  ஆலோசித்துக்   கொண்டிருக்கிறார்.

அந்த  விசயத்தில்  முகைதினும்   முக்ரிசும்  கவனமாக  செயல்பட  வேண்டும்  என்று  எச்சரிக்கிறார்  ஹம்டான்.  அவ்விருவருக்கும்   சிறைக்கு  அனுப்பப்பட்ட  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  இருந்ததுபோன்ற  “கவர்ச்சி”  இல்லை  என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“பாகோவிலும்  செம்பூர்ணாவிலும்  உள்சச்சரவு  இன்னும்  தொடர்கிறது.  உறுப்பினர்கள்  அம்னோ  இன்னும்  வலுவாகவே  உள்ளது  என்கிறார்கள்.   இந்நிலையை  அன்வாரை  விலக்கியபோது  பெமாத்தாங்  பாவில்  நிகழ்ந்ததுடன்   ஒப்பிட்டுப்  பாருங்கள்.

“இன்றுவரை  பிகேஆர் பெர்மாத்தாங்  பாவ்  வலுவாகவே  உள்ளது. கட்சி  வேண்டுமானால்  பலவீனம்  கண்டிருக்கலாம். இதுதான்  அன்வாரின்  கவர்ச்சி”, என்றார்.

“அன்வார்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டதன்  தாக்கத்தை  நினைத்துப்  பார்த்தால்  புதிய  கட்சியை  உருவாக்கும்  ஆற்றல்  முகைதினுக்கோ  முகிரிசுக்கோ  இருக்கிறதா  என்ற  கேள்விக்கு  விடை  கிடைத்து  விடும்”,  என்றாரவர்.

“கவர்ந்து  இழுக்கும்  சக்தி  தேவை.  அது  முகைதினுக்கோ,  முக்ரிசுக்கோ,  ஷாபிக்கோ  இருப்பதாக  நான்  நினைக்கவில்லை”,  என  ஹம்டான்  கூறினார்.