1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வாளரின் அறிக்கையை சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டது

 

srreportonagலண்டனை தளமாகக் கொண்ட சரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான மலேசிய தேசிய கணக்காய்வாளரின் (ஏஜி) பல பகுதிகளை வெளியிட்டுள்ளது. அவரின் அறிக்கை அதிகாரப்பூர்வமான இரகசியச் சட்டத்தின் (ஒஎஸ்எ) கீழ் இரகசியமானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையின் பல பகுதிகளையும் அவை சார்ந்த பல ஆவணங்களையும் சரவாக் ரிப்போர்ட் பெற்றுள்ளதாக அது கூறிக்கொண்டது.

அவரது அறிக்கையில் ஏஜி அம்பிரின் புவாங் தெரிவித்துள்ள கருத்துகளை, குறிப்பாக பல கேள்விக்குரிய நிதி இடமாற்றங்கள் செய்யப்பட்டது, சரவாக் ரிப்போர்ட் பட்டியலிட்டுள்ளதோடு முழு விபரங்களையம் அளித்துள்ளது.

சட்டப் பிரச்சனை காரணமாக மலேசியகினி அந்த ஆவணங்களை சுயேட்சையாக பரிசீலிக்கவோ அவற்றை வெளியிடவோ முடியாது.

அடுத்த சில நாட்களில் ஏஜியின் அறிக்கையிலிருந்து இன்னும் அதிகமான விபரங்கள் வெளியிடப்படும் என்று சரவாக் ரிப்போர்ட் மேலும் கூறியது.

கடந்த ஏப்ரலில், நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஏஜியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மறுத்து விட்டார்.

அந்த அறிக்கை எப்போது இரகசியமற்றது என்று வகைப்படுத்தும் என்று கூற அரசாங்கம் மறுத்து விட்டது. இது வரையில், நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் மட்டுமே அந்த அறிக்கையைப் பெற்றுள்ளனர்.

ஏஜியின் அறிக்கையில் காணப்படும் தகவலை வெளியிடுவது கடமையாகும் என்று சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் மலேசியாகினியிடம் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்படுவது பற்றி கவலைப்பட வில்லையா என்று கேட்கப்பட்டதற்கு, பிரதமர் நஜிப் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய கிளேர், அப்போதுதான் தாம் வழக்கை எதிர்கொள்ள முடியும் என்றார்.

ஒரு காலத்தில் பெருமளவு மதிக்கப்பட்ட, சட்டத்திற்கு மதிப்பளித்த மலேசிய அரசாங்கத்திற்கு என்னவாயிற்று என்று உலகம் தெரிந்துகொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்றாரவர்.