மலேசியா மேலும் பல ஐஎஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிப்பதாக போர்பஸ் ஏடு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளது.
தீவிரவாத ஐஎஸ்ஸுக்கு மலேசியாவின் மிதவாத இஸ்லாமும் அது அந்தப் பயங்கரவாத அமைப்பின் வன்முறை அணுகுமுறைகளைக் கண்டனம் செய்வதும் பிடிக்கவில்லை என அல்பேனியில் உள்ள நியு யோர்க் ஸ்டேட் யுனிவர்சிடியின் இணை அரசியல் பேராசிரியர் மெரிடித் வைஸ் போர்பஸிடம் கூறியுள்ளார்.
அந்தப் பயங்கரவாத அமைப்பு, மலேசியாவில் குறைந்த வருமானம் பெற்று அதிருப்தியுடன் வாழும் மக்களை எதிர்காலத் தாக்குதல்காரர்களாக மாற்ற நல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறது என்றும் அவர் கூறினார்.
ஐஎஸ்ஸைக் கடுமையாகக் கண்டனம் செய்வதிலும் ஐஎஸ்-ஸை ஒழிப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதிலும் முன்னணி வகிக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றென போர்பஸ் குறிப்பிட்டது.
“ஐஎஸ் இதை ஒரு தொல்லையாகக் கருதுகிறது”, என அமெரிக்காவின் அனைத்துலக ஆய்வு மையத்தில் தென்கிழக்காசிய திட்டக் குழு உறுப்பினராகவுள்ள புவோங் இங்குயென் கூறினார்.
அதனால் அது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவற்றைத் தாக்குவதென முடிவு செய்துள்ளது என்று கூறிய அவர், அதன் ஆதரவாளர்கள் முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் “இஸ்லாத்தை நம்பாதவர்கள்”மீது தாக்குதல் நடத்தியிருப்பது இதைத் தெளிவாகக் கான்பிக்கிறது என்றார்.
மலேசியாவில் ஐஎஸ்ஸை ஆதரிப்போரில் ஒரு பகுதியினர் ஏழைகளாக இருககலாம் என்று சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஓ இ சன் கூறினார்.
அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 2014-இல் மலேசியரில் ஒரு விழுக்காட்டினர் ஏழ்மை நிலைமையில் வாழ்பவர்கள் என அக்கட்டுரை கூறிற்று.
ஏழைகளாக உளளவர்களில் சிலரைச் சமயத்தைக் காட்டி ஐஎஸ் தொண்டர்களாக மாற்றும் சாத்தியம் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
ஐஎஸ் வருங்காலத்தில் போலீசையும் அரசாங்கத்தையும் இலக்காக வைத்துத் தாக்குதல்களை நடத்தலாம் என்றும் வைஸ் கூறினார்.